கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரயிலின் வேகம் அதிகரிப்பு: இனி 40 நிமிடம் தாமதமாகவே புறப்படும்!

ரயில்
ரயில்hindu கோப்பு படம்

கன்னியாகுமரியிலிருந்து சென்னை செல்லும் கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரயிலின் வேகம் அக்டோபர் 10-ம் தேதி முதல் சற்றே அதிகரிக்கப்படுகிறது.

கன்னியாகுமரியிலிருந்து சென்னைக்கு இயக்கப்படும் கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரயிலானது குமரி மாவட்டத்திலிருந்து இயக்கப்படும் ரயில்களில் மிக முக்கியமான ரயில் ஆகும். இதில் நாகர்கோவிலிருந்து தினசரி சராசரியாக 800-க்கும் அதிகமானோர் பயணம் செய்கின்றனர். நாகர்கோவில் ரயில் நிலையத்தின் வருவாயில் ஐம்பது சதவீதம் இந்த ரயில் மூலமே கிடைத்து வருகிறது.

தற்போது இந்த ரயில் கன்னியாகுமரியிலிருந்து மாலை 5.05 மணிக்கு புறப்பட்டு, திருநெல்வேலிக்கு வெகுசீக்கிரம் சென்று சேர்கிறது. ஆனால், திருநெல்வேலி ஜங்ஷன் அவுட்டரில் கிராஸிங்கிற்காக சுமார் 24 நிமிடங்கள் இந்த ரயில் நிறுத்தப்பட்டு பின்னர் புறப்படுகிறது. இந்த ரயில் காலை 6.10 மணிக்கு சென்னை எழும்பூர் சென்றடையும்.

அக்டோபர் 10-ம் தேதி முதல், கன்னியாகுமரியிலிருந்து இந்த ரயில் புறப்படும் நேரத்தில் மாற்றம் செய்யப்படுகிறது. இதன்படி, மாலை 5.05-க்குப் பதிலாக 5.45 மணிக்கு இந்த ரயில் கன்னியாகுமரியிலிருந்து புறப்படும். 40 நிமிடங்கள் தாமதமாக ரயில் கிளம்பினாலும் குறித்த நேரத்துக்கு நெல்லை ஜங்ஷனை சென்றடையும் வகையில் ரயிலின் வேகம் சற்றே அதிகரிக்கப் படுகிறது. இதன் மூலம், கிராஸிங்கிற்காக நெல்லை ஜங்ஷன் அவுட்டரில் சுமார் 24 நிமிடங்கள் இந்த ரயில் நிறுத்திவைக்கப்படுவதும் இனிமேல் தவிர்க்கப்படும்.

இந்த ரயில் புறப்படும் நேரத்தை 40 நிமிடங்கள் தாமதப்படுத்தி இருப்பதால் கன்னியாகுமரியிலிருந்து நெல்லை வரை உள்ள ஸ்டேஷன்களில் இந்த ரயிலை பிடிப்பவர்களுக்கு சுமார் 40 நிமிடங்கள் பயண நேரம் மிச்சமாகும். அதேசமயம், நெல்லை மற்றும் நெல்லைக்கு அடுத்து வரும் ஸ்டேஷன்களில் இந்த ரயிலைப் பிடிப்பவர்கள் வழக்கமான நேரத்துக்கே இந்த ரயிலை பிடிக்க வேண்டி இருக்கும். பயண நேரமும் குறையாது. அதேபோல் இந்த ரயில் சென்னை செல்லும் நேரத்திலும் எவ்வித மாற்றமும் இருக்காது. வழக்கம் போல காலை 6.10 மணிக்கே சென்னை சென்றடையும்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in