
நாடுமுழுவதும் நடைமேடை கட்டணம் 10 ரூபாயாக வசூலிக்கப்பட்டு வரும் நிலையில், சென்னையில் 20 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது ரயில் பயணிகளை அதிருப்தியில் ஆழ்த்தியுள்ளது.
நாடு முழுவதும் உள்ள ரயில் நிலையங்களில், நடைமேடை கட்டணமாக 10 ரூபாய் வசூலிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் கூட்ட நெரிசலைத் தவிர்ப்பதற்காக ஒரு சில ரயில் நிலையங்களில் கட்டணத்தை உயர்த்திக் கொள்ள அண்மையில் ரயில்வே நிர்வாகம் அனுமதி அளித்திருந்தது. அதன்படி, கடந்த கோடைக் காலத்தில் கூட்ட நெரிசலைத் தவிர்க்கச் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் நடைமேடை கட்டணம் 10 லிருந்து 15 ரூபாயாக ஆக உயர்த்தப்பட்டது. இந்நிலையில் மீண்டும் நடைமேடை கட்டண உயர்வு அமலுக்கு வந்திருப்பது பயணிகளை அதிருப்திக்குள்ளாக்கி இருக்கிறது.
சென்னை சென்ட்ரல், எழும்பூர், தாம்பரம், காட்பாடி, செங்கல்பட்டு, அரக்கோணம், திருவள்ளூர், ஆவடி ஆகிய 8 ரயில் நிலையங்களில் நடைமேடைக் கட்டணம் 10 லிருந்து 20 ரூபாயாக உயர்ந்துள்ளது. விழாக் காலங்களில் கூட்டத்தைத் தவிர்க்க 01.10.2018 முதல் 31.01.2023 வரை கட்டண உயர்வு அமலில் இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே நடைமேடை கட்டண உயர்வு ரயில் பயணிகள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இந்நிலையில், இது தற்காலிக உயர்வுதான் என ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.