இரவில் வீடுகளில் புகுந்து நகைகளை திருடும் டவுசர் கொள்ளையர்கள்: பதறும் பெண்கள்
அரியலூர் மாவட்டத்தில் அரை டவுசர் கொள்ளையர்கள் நடமாட்டம் மீண்டும் தொடங்கியுள்ளதால் அந்த மாவட்டத்தைச் சேர்ந்த பொதுமக்கள் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர்.
அரியலூர் மாவட்டம், ஆண்டிமடம் அருகே சூரக்குழி கிராமத்தில் நேற்று இரவு டவுசர் கொள்ளையர்கள் புகுந்துள்ளனர். அங்குள்ள திவ்யா என்பவரின் வீட்டுக்குள் புகுந்த கொள்ளையர்கள் திவ்யாவின் கழுத்தில் இருந்த மூன்றரை பவுன் தங்கச் சங்கிலியை பறித்து சென்றனர். அங்கிருந்து சென்ற கொள்ளையர்கள் அடுத்ததாக 500 மீட்டர் தொலைவில் உள்ள சிங்காரவேலு என்பவர் வீட்டில் புகுந்து அங்கு உறங்கிக் கொண்டிருந்த அவரது மனைவி லட்சுமியின் கழுத்தில் இருந்த தாலிக் கயிறை அறுக்க முயற்சி செய்துள்ளனர்.
இதில் விழித்துக் கொண்டிருந்த லட்சுமி ஐயோ திருடன் என்று சத்தம் போட்டிருக்கிறார். அதனால் பீரோவில் இருந்து 5000 பணத்தை மட்டும் எடுத்து கொண்ட கொள்ளையர்கள் அங்கிருந்து தப்பினர். விரட்டிச் சென்றவர்கள் பிடித்து விடாமல் இருக்கவும், விரைவாக ஓடுவதற்கு வசதியாகவும் அவர்கள் வெறும் டவுசர் மட்டுமே அணிந்திருந்தார்களாம்.
இது குறித்து தகவல் அறிந்த ஆண்டிமடம் காவல்துறையினர் சூரக்குழி வந்து கொள்ளை நடந்த வீடுகளில் கொள்ளையர்கள் ஏதேனும் தடயங்களை விட்டுச் சென்றிருக்கிறார்களா என்று ஆய்வு மேற்கொண்டு, மேலும் விசாரணை செய்து வருகின்றனர். பல ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் டவுசர் கொள்ளையர்கள் நடமாட்டம் காணப்படுவதால் அப்பகுதி மக்கள் பெரும் அச்சத்தில் உறைந்துள்ளனர்.