ஈபிஎஸ் சம்பந்திக்கு நெருக்கமான அரசு ஒப்பந்ததாரர் வீடு, அலுவலகங்களில் ஐடி ரெய்டு!

எஸ்பிகே காம்பிளக்ஸ்
எஸ்பிகே காம்பிளக்ஸ்

கோவையில் சந்திரசேகர் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை செய்து வரும் நிலையில், விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் உள்ள நெடுச்சாலைத்துறை ஒப்பந்ததாரர் செய்யாத்துரை வீட்டிலும் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

அதிமுகவின் அதிகாரப்பூர்வ நாளிதழான "நமது அம்மா” நாளிதழின் வெளியீட்டாளர் சந்திர சேகர் வீடு மற்றும் அவர் தொடர்புடைய இடங்களில் வருமானவரித்துறை அதிகாரிகள் இன்று காலை முதல் சோதனை நடத்தி வருகின்றனர். கோவை வடவள்ளியில் உள்ள அவரின் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் 5 பேர் சோதனை நடத்தி வருகின்றனர்.

இதேபோல, சந்திர சேகரின் தந்தை வீட்டிலும் வருமான வரித்துறை அதிகாரிகள் 6 பேர் சோதனை நடத்தி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த சோதனை காலை 11 மணியளவில் தொடங்கி நடைபெற்று வருவதாக சொல்லப்படுகிறது. அதிகாரிகள் 6 குழுக்களாக பிரிந்து சோதனை நடத்தி வருகின்றனர்.

இதன் ஒரு பகுதியாக விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையிலுள்ள நெடுச்சாலைத்துறை ஒப்பந்ததாரர் செய்யாத்துரையின் வீடு மற்றும் அலுவலகங்களிலும் வருமான வரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். செய்யாத்துரை மற்றும் இவரது மகன் நாகராஜன் இருவரும் இணைந்து எஸ்பிகே குழுமத்தை நடத்தி வந்தனர். தமிழக அரசின் சாலை ஒப்பந்தப் பணிகள் மற்றும் கட்டுமானப் பணிகளை எஸ்பிகே குழுமம் தான் செய்து வருகிறது. மேலும், இவர் எடப்பாடி பழனிசாமியின் சம்பந்திக்கு நெருக்கமானவர் என்றும் கூறப்படுகிறது. இந்நிலையில், இன்று அவரது அலுவலகம் மற்றும் வீடுகளில், சுமார் 20-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இது அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in