கரன்ஸி நோட்டுகளில் கடவுள் படங்கள்: ரூபாய் மதிப்பை அதிகரிக்க அர்விந்த் கேஜ்ரிவால் யோசனை!

கரன்ஸி நோட்டுகளில் கடவுள் படங்கள்: ரூபாய் மதிப்பை அதிகரிக்க அர்விந்த் கேஜ்ரிவால் யோசனை!

ரூபாய் கரன்ஸி நோட்டுகளில் லக்‌ஷ்மி, விநாயகர் ஆகிய கடவுளர்களின் படங்கள் அச்சிடப்பட வேண்டும் என்று பிரதமர் மோடிக்குக் கோரிக்கை விடுத்திருக்கிறார் டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால்.

இதுதொடர்பாக இன்று செய்தியாளர்களிடம் பேசிய அர்விந்த் கேஜ்ரிவால் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய மதிப்பு குறைந்துவருவது குறித்து கவலை தெரிவித்தார்.

மேலும், “இதுபோன்ற பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண நாம் பல முயற்சிகளைச் செய்கிறோம். எனினும், எவ்வளவு முயற்சி செய்தபோதும் பலன் கிட்டுவதில்லை. அதுபோன்ற தருணங்களில், கடவுளர்களின் ஆசீர்வாதம் இருந்தால் நாம் எடுக்கும் முயற்சிகளுக்குப் பலன் ஏற்படும் எனும் எண்ணம் தோன்றுகிறது. நேற்று முன்தினம் தீபாவளி கொண்டாடினோம். அப்போது லக்‌ஷ்மி, விநாயகர் போன்ற கடவுள்களை வணங்கினோம். நமது வீடுகளின் பூஜை அறைகளில் லக்‌ஷ்மி, விநாயகர் படங்களை வைத்திருக்கிறோம். தினமும் காலையில் பணியைத் தொடங்குவதற்கு முன்னர் அந்தப் படங்களின் முன் நின்று பிரார்த்தனை செய்கிறோம். இந்நிலையில், மத்திய அரசுக்கும், பிரதமருக்கும் ஒரு கோரிக்கையை முன்வைக்கிறேன். ரூபாய் நோட்டுகளில் காந்தி படம் ஒருபக்கம் இருக்கட்டும். இன்னொரு பக்கம் விநாயகர், லக்‌ஷ்மி ஆகிய கடவுள்களின் படங்கள் அச்சிடப்பட வேண்டும். முன்பே சொன்னதுபோல, இந்தியாவின் பொருளாதார வளர்ச்சிக்குப் பல்வேறு நடவடிக்கைகள் அவசியம். அவற்றுடன் சேர்த்து, தேவி, தேவர்களின் ஆசீர்வாதமும் நமக்கு அவசியம். ரூபாய் நோட்டுகளில் லக்‌ஷ்மி, விநாயகர் படங்கள் இடம்பெற்றால், ஒட்டுமொத்த தேசத்துக்கும் அவர்களின் அருளாசி கிடைக்கும். கடவுள் லக்‌ஷ்மியைச் செல்வத்தின் கடவுளாகக் கருதுகிறோம். விநாயகர் வினை தீர்க்கும் கடவுளாகக் கருதப்படுகிறார். எனவே இருவரின் படங்களும் ரூபாய் நோட்டுகளில் இடம்பெற வேண்டும் என்று விரும்புகிறேன்” என்று அவர் கூறியிருக்கிறார்.

“அனைத்து ரூபாய் நோட்டுகளிலும் இந்தப் படங்கள் இடம்பெற வேண்டும் என்று நான் சொல்லவில்லை. இப்போது புழக்கத்தில் இருக்கும் நோட்டுகள் அப்படியே இருக்கட்டும். புதிதாக அச்சிடப்படும் நோட்டுகளில் இந்தப் படங்கள் இடம்பெற வேண்டும்” என்று கூறியிருக்கும் அர்விந்த் கேஜ்ரிவால், “இந்தோனேசியா ஒரு முஸ்லிம் நாடு. அங்கு 2 சதவீத இந்துக்கள்தான் வசிக்கின்றனர். அந்த நாடு கூட தங்கள் கரன்ஸியில் விநாயகர் படத்தை அச்சிட்டிருக்கின்றனர். எனவே, நாமும் இந்தப் படங்களை கரன்ஸி நோட்டுகளில் அச்சிட வேண்டும் என்று மத்திய அரசைக் கேட்டுக்கொள்கிறேன்” என்று கூறினார்.

இந்த யோசனை எப்படி வந்தது என்று செய்தியாளர்கள் கேட்டபோது, “நேற்று முன்தினம் தீபாவளி தினத்தில் பூஜை செய்தபோது என் மனதில் உதித்த யோசனை இது” என்று கேஜ்ரிவால் பதிலளித்தார். இந்தோனேசியாவே விநாயகர் படத்தை அச்சிடும்போது நாம் அச்சிட்டால் என்ன என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in