திண்டுக்கல் அருகே பள்ளி மாணவிகளைத் தற்கொலைக்குத் தூண்டிய ஆசிரியை சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
திண்டுக்கல் மாவட்டம் சின்னாளபட்டி அரசு உதவி பெறும் பெண்கள் உயர்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இங்கு தொப்பம்பட்டி பகுதியைச் சேர்ந்த மாணவிகள் ஏராளமானோர் படித்து வருகின்றனர். 9-ம் வகுப்பு மாணவிகள் இருவரை ஆசிரியை ஒருவர் சாதியைச் சொல்லி திட்டி வருவதாகவும், பள்ளி வாகனத்தில் வரும்போது குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்த மாணவிகள் அமர இருக்கை தரப்படுவதில்லை என குற்றச்சாட்டு எழுந்தது.
இதனால் மனஉளைச்சலுக்கு ஆளான 9-ம் வகுப்பு மாணவிகள் 2 பேர், பள்ளி கழிவறையில் பினாயில் குடித்து தற்கொலைக்கு முயன்றனர். உடனடியாக மீட்கப்பட்ட 2 மாணவிகளுக்கும் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இப்பிரச்சினைக்குக் காரணமான ஆசிரியை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாணவிகளின் பெற்றோர், சின்னாளபட்டி போலீஸில் புகாரளித்தனர்.
இதன்படி போலீஸார் விசாரித்து வருகின்றனர். மாணவியரை ஆசிரியை திட்டியது தொடர்பாக வருவாய்த்துறை, பள்ளிக் கல்வித்துறையினர், குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரிகள், நன்னடத்தை அதிகாரிகள் பள்ளி மாணவிகள், ஆசிரியைகளிடம் விசாரித்தனர். இதை தொடர்ந்து பள்ளி கணித ஆசிரியை பிரேமலதாவை சஸ்பெண்ட் செய்து பள்ளி நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.