
நேபாளத்தில் பெய்து வரும் கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவுகள் மற்றும் வெள்ளத்தில் சிக்கி இதுவரை 38 பேர் பலியாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. மேலும், முக்கிய தேசிய நெடுஞ்சாலையில் ஏற்பட்ட நிலச்சரிவு காரணமாக போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்திய துணை கண்டத்தில் ஜூன் மாதம் தொடங்கி செப்டம்பர் மாதம் வரை பருவமழைக்கான காலம். கேரளா தொடங்கி இமயம் வரை உள்ள நிலப்பரப்பு முழுவதும் பெய்யும் மழையால் மலைப்பிரதேசங்களில் அவ்வபோது நிலச்சரிவு ஏற்படுவது வாடிக்கை. இந்த ஆண்டு பருவ மழை தாமதமாக தொடங்கினாலும், அதன் தாக்கம் இந்தியா, நேபாளம் உள்ளிட்ட நாடுகளில் அதிகமாக காணப்படுகிறது. குறிப்பாக இமயமலைத் தொடர்களில் கொட்டி வரும் கன மழையால் பல்வேறு ஆறுகளில் செல்லும் நீர் அபாய கட்டத்தை தாண்டியுள்ளது.
இந்நிலையில் நேபாளத்தில் பெய்த கனமழை காரணமாக பல முக்கிய நெடுஞ்சாலைகளில் நிலச்சரிவு ஏற்பட்டு போக்குவரத்து தடைப்பட்டுள்ளது. கனமழைக்கு நேற்று ஒருவர் இறந்த நிலையில், பருவமழைக்கு பலியானோர் எண்ணிக்கை 38 ஆக அதிகரித்துள்ளது. கடந்த ஒரு வார காலமாக பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.
இதனால், அங்குள்ள பாக்மதி மற்றும் சிந்துலி ஆறுகளில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, கரையோரப் பகுதிகளை சூழ்ந்தது. இதன் காரணமாக, அந்த பகுதிகளில் வசித்து வந்த 40 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்களை, மீட்புக்குழுவினர் பாதுகாப்பாக வெளியேற்றியுள்ளனர். வீடுகளை இழந்து தவித்த மக்கள் தற்காலிக முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இதற்கிடையே, கனமழை காரணமாக முக்கிய நெடுஞ்சாலைகளில் நிலச்சரிவு ஏற்பட்டு, போக்குவரத்து முற்றிலும் தடைப்பட்டுள்ளது. இதுவரை நேபாளத்தில் பருவ மழைக்கு இறந்தவர்களின் எண்ணிக்கை 38 ஆக அதிகரித்துள்ளது. இதுதவிர 33 பேர் மாயமாகி உள்ளனர். அவர்களை தேடும் பணியை மீட்பு படையினர் தீவிரப்படுத்தியுள்ளனர்.