எந்த பகுதியில் திருட வேண்டும்; மளிகைக்கடைதான் மையப்புள்ளி: கொள்ளையனுக்கு ஐடியா கொடுத்த போலீஸ்காரர் சிக்கினார்!

 கைது
கைது`எந்த பகுதியில் திருட வேண்டும்'; கொள்ளையனுக்கு ஐடியா கொடுத்த போலீஸ்காரர் சிக்கினார்!

பெருந்துறை பகுதியில் கொள்ளையடிக்க திட்டம் வகுத்து கொடுத்த ஆயுதப்படை போலீஸ்காரர் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். திருட்டு வழக்கில் காவலர் ஒருவர் மூளையாக இருந்து செயல்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஈரோடு மாவட்டம், பெருந்துறை பகுதியில் கடந்த 2021-ம் ஆண்டு தொடர்ச்சியாக பல்வேறு குற்ற சம்பவங்கள் நடைபெற்றது. இதில் தொடர்புடைய குற்றவாளிகளை பிடிப்பதற்காக தனிப்படை அமைக்கப்பட்டது. பெருந்துறை பகுதியில் மோட்டார் சைக்கிள்களை திருடிய வழக்கில் நெல்லை மாவட்டம் திசையன்விளை மாததேவன்குளம் பகுதியை சேர்ந்த கார்த்திக் என்கிற செந்தில்குமார் (30) என்பவரை காவல்துறையினர் கைது செய்து கோவை சிறையில் அடைத்தனர்.

இந்தநிலையில் பெருந்துறை பகுதியில் உள்ள ஒரு மளிகை கடையில் சந்தேகப்படும்படி சிலர் நடமாட்டம் இருப்பதாக பெருந்துறை காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் இன்ஸ்பெக்டர் மசூதாபேகம் மற்றும் காவலர்கள் மளிகை கடைக்கு சென்று ரகசிய விசாரணை நடத்தினர். விசாரணையில் அந்த மளிகை கடை ஈரோடு ஆயுதப்படையில் பணியாற்றும் காவலர் ராஜீவ்காந்தி என்பவருக்கு சொந்தமானது என தெரியவந்தது. இதனையடுத்து, காவல்துறையினர் ராஜீவ்காந்தி பற்றி ரகசிய விசாரணை நடத்தினர். விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்தன.

திருட்டு வழக்கில் கைதான செந்தில்குமாரை வழக்கு தொடர்பாக கோவை சிறையில் இருந்து பெருந்துறை நீதிமன்றத்திற்கு பெருந்துறை காவல்துறையினர் அழைத்து வந்தனர். அந்த விசாரணை அதிகாரிகளில் காவலர் ராஜீவ்காந்தியும் ஒருவராக இருந்துள்ளார். அப்போது ராஜீவ்காந்தி பெருந்துறை காவல் நிலையத்தில் குற்றப்பிரிவு முதல் நிலை காவலராக பணிபுரிந்து வந்தார். அப்போது காவலர் ராஜீவ்காந்திக்கும், கைதான செந்தில்குமாருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. காவலர்களிடம் சிக்காமல் திருடுவது எப்படி? என்று நான் சொல்லித்தருகிறேன். சிறை தண்டனை முடிந்ததும் என்னை வந்து பார் என்று ராஜீவ்காந்தி கூறியுள்ளார்.

இந்தநிலையில் கடந்த 2022-ம் ஆண்டு சிறைத் தண்டனை முடிந்து செந்தில்குமார் வெளியே வந்தார். அப்போது ராஜீவ்காந்தி ஈரோடு ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டு பணிபுரிந்து வந்தார். இதனிடையே, செந்தில்குமார் வெளியே வந்து காவலர் ராஜீவ்காந்தியை சந்தித்தார். அப்போது ராஜீவ்காந்தி பெருந்துறையில் தனக்கும் மளிகைக்கடை இருப்பதாகவும் அங்கு தங்கியிருந்து திருட்டில் ஈடுபடலாம் என்றும் ஐடியா கொடுத்துள்ளார். அப்போது செந்தில்குமாருடன் மதுரையை சேர்ந்த கருப்பசாமி, பாலசுப்பிரமணியம் ஆகிய 2 பேரும் சேர்ந்து கொண்டனர். இதனையடுத்து, காவலர் ராஜீவ்காந்தி எந்த பகுதியில் திருட வேண்டும். எந்த பகுதியில் சி.சி.டி.வி. கேமரா இருக்காது, எந்த பகுதியில் போலீஸ் ரோந்து வராது என்று ஐடியா கொடுத்துள்ளார். அதன்படி செந்தில்குமார் மற்றும் அவரது கூட்டாளிகள் பல்வேறு இடங்களில் திருடுவதற்கு மூளையாக செயல்பட்டு வந்துள்ளார்.

இதன்படி சித்தோடு, பெருந்துறை, பெருமாநல்லூரில் வீடுகள் உள்பட பல்வேறு இடங்களில் செந்தில்குமார் மற்றும் அவரது கூட்டாளிகள் கைவரிசை காட்டியது தெரியவந்தது. இதனையடுத்து பெருந்துறையில் நடந்த கொள்ளை வழக்கில் தொடர்புடைய மதுரை மேலூர் பகுதியை சேர்ந்த மணிகண்டன் என்கிற பாலசுப்பிரமணி (42), நாகம்மாள் கோயில் தெருவை சேர்ந்த கருப்புசாமி (31), திருட்டுக்கு மூளையாக செயல்பட்ட காவலர் ராஜீவ்காந்தி ஆகியோரை பெருந்துறை காவல்துறையினர் கைது செய்தனர்.

இதேபோல் சித்தோட்டில் நடத்த கொள்ளையில் தொடர்புடைய கார்த்திக் என்கிற செந்தில்குமார் (30) என்பவரை சித்தோடு காவல்துறையினர் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 6 பவுன் நகைகள், 2 பட்டா கத்தி, ஒரு கார், ஒரு மோட்டார் சைக்கிள் ஆகியவற்றை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். இந்த திருட்டு வழக்கில் தொடர்புடைய மேலும் 2 பேரை காவல்துறையினர் தேடி வருகின்றனர். கொள்ளைக்கு மூளையாக செயல்பட்ட காவலர் ராஜீவ்காந்தி 2009-ம் ஆண்டு முதல் 2020-ம் ஆண்டு வரை திருப்பூரில் பல்வேறு போலீஸ் நிலையங்களில் பணிபுரிந்து வந்தது தெரியவந்துள்ளது. இதன் பின்னர் ஈரோடு மாவட்டம் பெருந்துறை குற்றப்பிரிவில் முதல் நிலை காவலராகவும், அதன் பின்னர் தற்போது ஆயுதப்படையில் காவலராகவும் பணிபுரிந்து வந்துள்ளார். கைதான அனைவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு கோபி மாவட்ட கிளை சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். திருட்டு வழக்கில் காவலர் ஒருவர் மூளையாக இருந்து செயல்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in