48 ஆண்டுகள் இல்லற வாழ்க்கை... மரணத்தை தாங்க முடியாமல் கதறல்: கணவர் இறந்த சில நிமிடங்களில் மனைவி உயிரிழப்பு

உயிரிழந்த தம்பதி
உயிரிழந்த தம்பதி

மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலத்தில் தன் அன்புக்கணவன் இறந்த சில மணி நேரத்தில் மயங்கி விழுந்து மனைவியும் இறந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

குத்தாலம் கீழ காலனியை சேர்ந்தவர்கள் குணசீலன் (வயது 74)- தமிழரசி(68) தம்பதி. இவர்களுக்கு திருமணம் ஆகி 48 ஆண்டுகள் ஆகிறது. இவர்களின் இனிய இல்லறத்தின் பயனாக ஒரு மகனும், இரண்டு மகள்களும் உள்ளனர். இவர்கள் அனைவருக்கும் உரிய காலத்தில் உரிய முறைப்படி திருமணம் செய்து வைத்துவிட்டு தங்களது பூர்வீக வீட்டில் இருவரும் வாழ்ந்து வந்தனர்.

இந்நிலையில் திடீர் உடல்நலக்குறைவு காரணமாக குணசீலன் நேற்று உயிரிழந்தார். தனது வாழ்வின் அனைத்து காலகட்டத்திலும் அனைத்து விதமான நிகழ்வுகளிலும் தன்னுடன் இரண்டற கலந்துவிட்ட தனது கணவர் இறந்ததால் தமிழரசி துடித்துப்போனார். அவரின் கதறலை உறவினர்கள் யாராலும் கட்டுப்படுத்த இயலவில்லை. கணவருக்கும் தனக்குமுள்ள நெருக்கத்தை வாய்விட்டு சொல்லி புலம்பிக் கொண்டிருந்தார்.

அப்படியே அழுது கொண்டிருந்தவர் அடுத்த சில மணி நேரத்தில் திடீரென மயங்கி விழுந்து மூர்ச்சையானார். பதறிப் போன உறவினர்கள் உடனடியாக அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர் ஏற்கெனவே உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதனால் அவர்களின் பிள்ளைகள், உறவினர்கள் உட்பட கிராமமே சோகத்தில் மூழ்கியது.

இதனையடுத்து இறந்த அந்த தம்பதியினருக்கு முறைப்படி இறுதி சடங்கு செய்து இருவரின் உடல்களையும் அடக்கம் செய்தனர். கணவர் இறந்த துக்கத்தில் மனைவியும் உயிரிழந்து சாவிலும் இணைபிரியாத இந்த தம்பதியால் அனைவரும் சோகத்தில் மூழ்கினாலும் இருவரின் இணைபிரியா உறவு அனைவரையும் வியப்பிலும் ஆழ்த்தியுள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in