அடுத்த 48 மணி நேரத்தில்..!- சென்னை வானிலை ஆய்வு மையம் அலர்ட்

அடுத்த 48 மணி நேரத்தில்..!- சென்னை வானிலை ஆய்வு மையம் அலர்ட்

டிசம்பர் 5-ம் தேதி உருவாகும் காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 48 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைய கூடும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தென்கிழக்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் டிசம்பர் 5-ம் தேதி காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக கூடும். அது அடுத்த 48 மணி நேரத்தில் மேற்கு -வட மேற்கு திசையில் நகர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக தென் கிழக்கு வங்கக்கடல் பகுதியில் வலுவடைய கூடும். பிறகு மேற்கு- வட மேற்கு திசையில் நகர்ந்து டிசம்பர் 8-ம் தேதியை ஒட்டி தமிழகம், புதுச்சேரி கடலோரப் பகுதியில் அருகில் நிலவக்கூடும்.

கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக இன்று தமிழ்நாடு கடலோர மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களிலும் உள் தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நாளை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும். வரும் 3-ம் தேதி தமிழக கடலோர மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களிலும் உள் தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

வரும் 4-ம் தேதி தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதியில் ஒரு சில இடங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 5-ம் தேதி தென் தமிழகத்தில் ஒரு சில இடங்களில் வட தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதியில் ஒரு இடங்களிலும் லேசான மழை பெய்யக்கூடும். சென்னை மற்றும் புறநகர் பகுதியில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

வரும் 4-ம் தேதி அந்தமான் கடல் பகுதியில் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்க கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோமீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும். வரும் 5-ம் தேதி தென்கிழக்கு வங்க கடல் பகுதியில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோமீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோமீட்டர் வேகத்திலும் மற்றும் அந்தமான் கடல் பகுதியில் சூறாவளிக் காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோமீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோமீட்டர் வேகத்திலும் வீசப்படும். எனவே இந்த பகுதிகளுக்கு மீனவர்களில் செல்ல வேண்டாம்" என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in