புதுச்சேரி மாநிலத்தில் இனி 24 மணி நேரமும் கடைகள் திறந்திருக்கும்: அரசின் அறிவிப்பால் வணிகர்கள் மகிழ்ச்சி

புதுச்சேரி மாநிலத்தில் இனி 24 மணி நேரமும் கடைகள் திறந்திருக்கும்: அரசின் அறிவிப்பால் வணிகர்கள் மகிழ்ச்சி

புதுச்சேரி மாநிலத்தில் 24 மணி நேரமும் கடைகள் திறந்திருக்கலாம் என அனுமதி அளித்து உத்தரவிடப்பட்டுள்ளது அம்மாநிலத்தில் உள்ள  வணிகர்களிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

புதுச்சேரி மிகப்பெரிய சுற்றுலா தலமாக வேகமாக வளர்ந்து கொண்டிருக்கிறது. வார இறுதியிலும், விடுமுறை நாட்களிலும் ஆந்திரா, கர்நாடகா, கேரளா,  தமிழ்நாடு உள்ளிட்ட பல மாநிலங்களில் இருந்து ஏராளமான சுற்றுலாப் பயணிகள் புதுச்சேரிக்கு படையெடுக்கிறார்கள்.  இங்குள்ள கடற்கரைகள், ஆரோவில்,  அரவிந்தர் ஆசிரமம், மணக்குள விநாயகர் கோயில்  மற்றும் மது விடுதிகள், பிரெஞ்ச் உணவகங்கள் ஆகியவை சுற்றுலாவாசிகளின்  இலக்காக இருக்கிறது.

தற்போது இரவு 10 மணி வரை சில கடைகளும்,  12 மணி வரையில் சில கடைகளும் திறந்திருக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.  இதனால் நள்ளிரவில் சுற்றுலாப் பயணிகளுக்கு உணவு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் கிடைப்பதில் சிக்கல் நீடித்து வந்தது. அதனால்  இரவு முழுவதும் கடைகள்  திறந்திருந்தால் சுற்றுலாப் பயணிகளுக்கு அது நன்மையாக இருக்கும் என  பொதுமக்கள் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.  வணிகர்கள் தரப்பிலும்  இரவிலும் கடைகள் திறந்திருக்க அனுமதிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.

இதனை ஏற்று இனி  இரவிலும் கடைகள் திறந்திருக்கலாம் என்று  புதுச்சேரி அரசு அனுமதி அளித்துள்ளது. 10 அல்லது அதற்கும்  மேற்பட்ட ஊழியர்களைக் கொண்ட கடைகள் மற்றும் வணிக நிறுவனங்கள் இரவில் திறந்திருக்கலாம் அறிவிக்கப்பட்டுள்ளது.  இரவு எட்டு மணிக்கு மேல் பெண்கள் வேலை செய்ய வேண்டிய கட்டாயம் இல்லை என்றும்,  கடைகளில் வேலை பார்க்கும் ஊழியர்களுக்கு வாரம் ஒரு நாள் சுழற்சி முறையில்  விடுமுறை அளிக்க வேண்டும் என்றும் அரசின்  உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது. இது மூன்றாண்டுகளுக்கு நடைமுறையில் இருக்கும் என்று அரசு அறிவித்துள்ளது.

இரவிலும் கடைகள் திறந்திருக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது புதுச்சேரி வணிகர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in