
கொடுங்கையூரில் வீடு புகுந்து ரவுடி ஓட ஓட விரட்டு படுகொலை கொலை செய்யப்பட்டுள்ளார். கஞ்சா தொழில் போட்டியில் 5 பேர் கொண்ட கும்பல் இந்த வெறிசெயலை நடத்தியுள்ளது.
சென்னை புளியந்தோப்பு பகுதியை சேர்ந்த ரவுடி கருப்பா என்ற ரகுபதி(28). ரவுடியான கருப்பா மீது பல்வேறு காவல் நிலையங்களில் கொலை, போதை பொருள் தடை சட்டம், உட்பட 5-க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளது. தற்போது கொடுங்கையூர் முத்தமிழ் நகரில் தனது குடும்பத்துடன் வசித்து வந்த ரவுடி கருப்பா ஆட்டோ ஒட்டுநராக பணியாற்றி வந்ததுடன், கஞ்சா விற்பனையிலும் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்தநிலையில் இன்று காலை 7 மணியளவில் கருப்பா வீட்டில் இருந்தபோது நுழைந்த 5 பேர் கொண்ட அடையாளம் தெரியாத கும்பல் ஒன்று கருப்பா என்ற ரகுபதியை கத்தியால் சரமாரி வெட்டிவிட்டு தப்பி சென்றனர்.
இதில் படுகாயமடைந்த கருப்பாவை உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக ஸ்டான்லி மருத்துவமனையில் சேர்ந்தனர். அங்கு அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட கருப்பா 8.30 மணியளவில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். பின்னர் உறவினர்கள் அளித்த தகவலின் பேரில் கொடுங்கையூர் போலீஸார் மருத்துவமனைக்கு சென்று கருப்பா உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.
முதற்கட்ட விசாரணையில் ரவுடி கருப்பா கஞ்சா விற்பனை செய்து வந்ததால் அவருக்கும் ரவுடி சுரேஷுக்கும் இடையே தொழில் போட்டி காரணமாக தகராறு ஏற்பட்டதும், இதனால் சுரேஷ் தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து வீடு புகுந்து கருப்பாவை கொலை செய்துவிட்டு தப்பி சென்றதும் தெரியவந்தது. இதனையடுத்து போலீஸார் கொலை வழக்குப்பதிவு செய்து தனிப்படை அமைத்து தப்பி ஓடிய சுரேஷ் மற்றும் அவரது கூட்டாளிகளை தேடிவருகின்றனர். பட்டப்பகலில் வீடு புகுந்து ரவுடியை படுகொலை செய்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது.