வங்கிகளில் ரூ. 4 ஆயிரம் கோடி கடன் பெற்று மோசடி : சுரானா குழுமத்தின் ரூ.124 கோடி சொத்துக்கள் முடக்கம்

சுரானா குழுமத்திற்கு எதிராக அமலாக்கத்துறை நடவடிக்கை
சுரானா குழுமத்திற்கு எதிராக அமலாக்கத்துறை நடவடிக்கைவங்கிகளில் ரூ. 4 ஆயிரம் கோடி கடன் பெற்று மோசடி : சுரானா குழுமத்தின் ரூ.124 கோடி சொத்துக்கள் முடக்கம்
Updated on
1 min read

வங்கிகளில் 4 ஆயிரம் கோடி ரூபாய் பணத்தைப் பெற்று மோசடி செய்த வழக்கில் சுரானா குழுமத்தின் 124 கோடி ரூபாய் மதிப்புள்ள அசையா, அசையும் சொத்துக்களை முடக்கி அமலாக்கத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.

சென்னையைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வந்த சுரானா இண்டஸ்ட்ரியல் லிமிடெட், சுரானா பவர் லிமிடெட் மற்றும் சுரானா கார்ப்பரேஷன் லிமிடெட் ஆகிய நிறுவனங்கள் ஐடிபிஐ, எஸ்பிஐ ஆகிய வங்கிகளிடமிருந்து 3986 கோடி ரூபாய் பணத்தைக் கடனாக பெற்று, அதைத் திருப்பிச் செலுத்தாமல் முறைகேட்டில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.

குறிப்பாக சுரானா இண்டஸ்ட்ரியல் லிமிடெட் நிறுவனம் ஐடிபிஐ வங்கியில் கடனாக 1301.76 கோடி ரூபாயும், சுரானா பவர் லிமிடெட் 1495.76 கோடி ரூபாயும், அதே போல் சுரானா கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனம் எஸ்பிஐ வங்கியில் 1,188.56 கோடி ரூபாயும் கடனாகப் பெற்றன.

இந்நிறுவனங்கள் கடனாகப் பெற்ற தொகையைத் திருப்பி செலுத்தாமல் மோசடி செய்ததாக, இந்நிறுவனங்களுக்கு எதிராக சிபிஐ வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.

இந்நிலையில், இந்த கடன் தொகையை வைத்து சட்ட விரோத பணப்பரிமாற்றத்தில் ஈடுபட்டதாக, அந்த நிறுவனத்தின் இயக்குநர்கள் தினேஷ் சந்த் சுரானா, விஜயராஜ் சுரானா மற்றும் நிறுவன ஊழியர்கள் ஆனந்த், பிரபாகரன் ஆகியோர் மீது அமலாக்கத்துறையும் வழக்குப்பதிவு செய்தது.

இந்த வழக்கில் தொடர்புடைய 4 பேரை 2022 ஜூலை 12-ம் தேதி அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர். இவ்வழக்கு தொடர்பான விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் ஏற்கெனவே சுரானா குழும நிறுவனத்துக்குச் சொந்தமான 67 காற்றாலைகள் உட்பட 124 கோடி மதிப்புடைய 75 அசையா சொத்துக்கள், 11.62 கோடி மதிப்பிலான நகை, விலையுயர்ந்த பொருட்கள் மற்றும் பணம் உள்ளிட்டவைகளை அமலாக்கத்துறை முடக்கியது.

இந்நிலையில் தற்போது கூடுதலாக சுரானா குழுமத்திற்குச் சொந்தமான மேலும் 124 கோடி மதிப்புள்ள 78 அசையா சொத்துகள் மற்றும் 16 அசையும் சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கி உள்ளது. இதுவரை இவ்வழக்கில் சுரானா குழுமத்துக்கு தொடர்புடைய 248.98 கோடி ரூபாயை அமலாக்கத்துறை முடக்கி இருப்பதாக தகவல் தெரிவித்துள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in