இந்திய வரலாற்றில் முதல்முறை: உச்சநீதிமன்ற வழக்கு விசாரணை நேரடியாக ஒளிபரப்பு!

இந்திய வரலாற்றில் முதல்முறை: உச்சநீதிமன்ற வழக்கு விசாரணை நேரடியாக ஒளிபரப்பு!

உச்சநீதிமன்ற வரலாற்றில் முதன்முறையாக இன்று தலைமை நீதிபதி என்.வி.ரமணா அமர்வு பங்கேற்கும் வழக்கின் விசாரணை நேரடி ஒளிபரப்பு செய்யப்படுகிறது.

உச்சநீதிமன்றத்தில் முதல் வழக்காக இன்று இலவசங்கள் தொடர்பான வழக்கு விசாரணை நேரலை செய்யப்பட்டது. இதன் மூலமாக வழக்கறிஞர்கள் முன்வைக்கும் வாதம், அரசின் கருத்துகள், நீதிபதிகளின் உத்தரவுகள் போன்றவற்றை உலகின் எந்த மூலையில் இருந்தும் நேரலையில் மக்கள் பார்க்க முடியும்.

உச்சநீதிமன்ற விசாரணைகளை லைவ் ஸ்ட்ரீமிங் எனப்படும் நேரடி ஒளிபரப்பு செய்ய பரிந்துரைத்து மூன்று ஆண்டுகளுக்கும் மேலான நிலையில், இன்று உச்ச நீதிமன்ற நடவடிக்கைகள் முதல்முறையாக நேரலை செய்யப்பட்டது.

இது தொடர்பாக உச்ச நீதிமன்ற இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்ட அறிவிப்பில், இந்திய தலைமை நீதிபதி என்.வி. ரமணா தலைமையிலான அமர்வின் நடவடிக்கைகள் வெப்காஸ்ட் போர்டல் மூலம் நேரடியாக ஒளிபரப்பப்படும் என்று கூறப்பட்டுள்ளது. இனி வழக்கமாக இந்த நேரலை தொடருமா என்பது குறித்து தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.

செப்டம்பர் 2018 ல் வெளியான ஒரு தீர்ப்பின் மூலம், அரசியலமைப்பின் 21 வது பிரிவின் கீழ் நீதியை அணுகுவதற்கான உரிமையின் ஒரு பகுதியாக நீதிமன்ற நடவடிக்கைகளை நேரடி ஒளிபரப்பு செய்ய வேண்டும் என உச்ச நீதிமன்றம் அறிவித்தது. அதனைத் தொடர்ந்து, உச்ச நீதிமன்றத்தின் இ-கமிட்டி இந்தியாவில் நீதிமன்ற நடவடிக்கைகளின் நேரடி ஒளிபரப்பை ஒழுங்குபடுத்துவதற்கான மாதிரி வழிகாட்டுதல்களை வெளியிட்டது.

தற்போது, ​​குஜராத், ஒரிசா, கர்நாடகா, ஜார்கண்ட், பாட்னா மற்றும் மத்தியப் பிரதேசம் என நாட்டில் உள்ள ஆறு உயர் நீதிமன்றங்கள், யூடியூப்பில் தங்கள் சொந்த சேனல்கள் மூலம் நீதிமன்ற நடவடிக்கைகளை நேரடியாக ஒளிபரப்புகின்றன.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in