மக்களை நோக்கிய பயணத்தைத் தொடங்கும் காங்கிரஸ்: முக்கியத் திருப்பம் ஏற்படுமா?

மக்களை நோக்கிய பயணத்தைத் தொடங்கும் காங்கிரஸ்: முக்கியத் திருப்பம் ஏற்படுமா?

காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரையில் மக்களுடைய பிரச்சினைகளை முன்னிறுத்தி பாத யாத்திரை நடத்த காங்கிரஸ் கட்சி தீர்மானித்துள்ளது. சோனியா காந்தி தலைமையில் நடந்த உதய்ப்பூர் சிந்தன் ஷிவிர் மாநாட்டில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக அரசின் தோல்விகளை மக்களிடம் எடுத்துரைக்கவும், விலைவாசி உயர்வு - வேலையில்லாத் திண்டாட்டம் ஆகிய பிரச்சினைகளைத் தீர்க்க வழியில்லாமல் மத்திய அரசு திணறுவதை எடுத்துச் சொல்லவும் இந்தப் பாத யாத்திரை பயன்படுத்திக்கொள்ளப்படும். ராகுல் காந்தி இந்த யாத்திரைக்குத் தலைமை வகிப்பார்.

அத்துடன் கட்சியின் தொண்டர்களைச் சந்திக்கவும் ஊற்சாகம் ஊட்டவும் அமைப்புகளை வலுப்படுத்தவும் யாத்திரை திட்டம் தீட்டப்பட்டிருக்கிறது. பொதுவான தேசிய பிரச்சினைகளுக்கு இந்த யாத்திரையில் முக்கியத்துவம் தரப்படும். மக்களை சாதி – மத ரீதியில் பிளவுபடுத்தும் திட்டங்கள் குறித்தும் எச்சரிக்கப்படும். இதுபோக அந்தந்த மாநிலங்களில் மாநில காங்கிரஸ் தலைவர்கள் தலைமையில் தனியாகவும் பாத யாத்திரைகள் நடத்தப்படும். அவற்றில் மாநிலப் பிரச்சினைகளுக்கும் கோரிக்கைகளுக்கும் முன்னுரிமை தரப்படும்.

ராகுல்தான் இனி!

ராஜஸ்தான் மாநிலம் உதய்ப்பூரில் நடந்த ‘நவ சங்கல்ப சிந்தன் ஷிவிர்’ மாநாட்டில் இந்த திட்டத்துக்கு காங்கிரஸ் பிரதிநிதிகள் ஒப்புதல் அளித்துவிட்டனர். இந்த முடிவு இரண்டு விஷயங்களை உறுதிப்படுத்துகிறது. காங்கிரஸ் கட்சியின் தலைமைப் பொறுப்பையும் தேர்தலுக்குப் பிறகு ஆட்சிப் பொறுப்பையும் ஏற்க ராகுல் காந்தியைக் கட்சித் தலைமை தேர்வு செய்திருக்கிறது. வெவ்வேறு மாநிலங்களில் பிற கட்சிகளுடன் கூட்டணி சேர்ந்து ஆட்சியில் இருந்தாலும், நரேந்திர மோடி தலைமையிலான அரசின் கொள்கைகளுக்கு எதிராகப் பிற கட்சிகளுடன் இணைந்து தேசிய அளவில் போராட்டங்கள், நாடாளுமன்றத்தில் எதிர்ப்பு ஆகியவற்றைச் செயல்படுத்தினாலும் அமைப்பு ரீதியாக காங்கிரஸை வலுப்படுத்தவே இப்போது முக்கியத்துவம் தரப்படுகிறது. சோர்ந்துகிடக்கும் தொண்டர்களுக்குத் தெம்பு ஊட்டவும், கட்சியின் அமைப்புகளுக்கு உருவமளித்து இயங்க வைக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

என்னென்ன மாற்றங்கள்?

இனி காங்கிரஸ் கட்சியில் சட்டப்பேரவை, நாடாளுமன்றத் தேர்தல்களில் ஒரு குடும்பத்திலிருந்து ஒருவர் மட்டுமே வேட்பாளராகப் போட்டியிட முடியும். கட்சிக்காக உழைக்கும் மற்றவர்களுக்கும் வாய்ப்பளிக்க இந்த முடிவு எடுக்கப்பட்டிருக்கிறது. காங்கிரஸை குடும்பக் கட்சி என்று விமர்சித்தே சோர்வடையச் செய்யும் பாஜக உள்ளிட்ட கட்சிகளின் செயல்களுக்குப் பதிலடியாக இந்த முடிவு எடுக்கப்பட்டிருக்கிறது. அதே வேளையில், குடும்பத்தில் ஒருவருக்கு வாய்ப்பு தந்தாலும் அதே குடும்பத்தைச் சேர்ந்த இன்னொருவர் – மகனோ, மகளோ, மருமகளோ, மருமகனோ, மனைவியோ, அண்ணனோ, தம்பியோ – தீவிர காங்கிரஸ்காரராக இருந்து ஐந்து ஆண்டுகளுக்கும் மேல் அவரும் கட்சிக்காக உழைத்திருந்தால், இன்னொரு வேட்பாளரின் உறவினர் என்பதற்காக அவருக்கு வாய்ப்பை மறுக்காமல் வெற்றி பெறும் அளவுக்கு செல்வாக்குள்ளவர் என்றால் அவருக்கும் வாய்ப்பளிக்கலாம் என்று கட்சி முடிவு செய்திருக்கிறது. இதனால் குடும்பமே கட்சி அரசியலில் ஈடுபடுவது முறைப்படுத்தப்படுவதுடன், ஊக்குவிக்கவும் வழியேற்பட்டிருக்கிறது.

75 வயதுக்கு மேற்பட்ட மூத்த தலைவர்கள் தேர்தலில் போட்டியிட முடியாதபடிக்கு கட்சி விதிகளை பாஜக வகுத்திருக்கிறது. அப்படிப்பட்ட தலைவர்களை ‘மார்க்க தர்சக் மண்டல்’ என்ற அமைப்பில் சேர்த்து கட்சி – ஆட்சி தொடர்பாக ஆலோசனைகளைக் கூறலாம் என்று ஒதுக்கிவிட்டது. மோடிக்கு முன்னதாக பிரதமர் பதவிக்கான வேட்பாளராகப் பேசப்பட்ட லால் கிருஷ்ண அத்வானி, உத்தர பிரதேச பாஜக தலைவர் முரளி மனோகர் ஜோஷி ஆகியோர் இப்படித்தான் ஓரங்கட்டப்பட்டனர். பிறகு பிரதமர் மோடி அவர்களுடைய பிறந்த நாள்களில் வீட்டுக்குப் போய் பொன்னாடை போர்த்தி வாழ்த்து தெரிவிப்பதுடன் ஆலோசனைகள் சுருக்கமாக முடித்துக்கொள்ளப்படுகின்றன.

காமராஜ் திட்டம்

ஆனால் காங்கிரஸ் கட்சியில் இதற்கும் முன்னால் இதைவிடச் சிறந்த முன்னோடி திட்டம் செயல்பட்டது. 1962 நாடாளுமன்ற, சட்டப்பேரவைப் பொதுத் தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு ஆங்காங்கே தோல்விகளும் பின்னடைவுகளும் ஏற்பட்டதால் கட்சியை வலுப்படுத்த முன்னணித் தலைவர்கள் ஆட்சிப் பொறுப்புகளைத் துறந்து கட்சிப் பணிகளில் ஈடுபட வேண்டும் என்று காங்கிரஸ் வலியுறுத்தினார். அதை அமல்படுத்தும்விதமாக முன்னுதாரணமாக தமிழ்நாட்டில் தானாகவே முன்வந்து முதலமைச்சர் பதவியிலிருந்து விலகினார் காமராஜர். மக்களுடைய தொடர்பு விட்டுவிடக் கூடாது என்று அடிக்கடி சுற்றுப்பயணம் செய்வார், பொதுக்கூட்டங்களில் பேசுவார். கட்சித் தொண்டர்களிடமும் பேசி அரசியல் நிலையைக் கணிப்பார். ஆனால், அவருக்குப் பிறகு தற்காலிகமாகக் கூட பதவிகளைத் தியாகம் செய்யும் எண்ணம் பல காங்கிரஸ் தலைவர்களுக்கு வரவில்லை.

அதைவிட மோசம், கட்சி – ஆட்சி இரண்டிலும் கூட பதவிகளைப் பெற்றனர். காங்கிரஸ் கட்சி இப்போது மக்களிடையே தொடர்பு இல்லாததால் செல்வாக்கிழந்ததைப் போலக் காட்சி தருகிறது. அந்தத் தொடர்பை கட்சி அமைப்புகளும் தொண்டர்களும் தலைவர்களும் ஏற்படுத்திவிட்டால் காங்கிரஸ் மீண்டும் வலுப்படும். உதய்ப்பூர் மாநாட்டில் இது உணரப்பட்டிருக்கிறது. பாஜகவில் 75 வயதுக்குப் பிறகுதான் மூத்த தலைவர்களுக்கு கட்சிப் பொறுப்புகளிலிருந்து ஓய்வு தரப்படுகிறது. காங்கிரஸில் அதை 70 வயதிலிருந்தே தொடங்கலாம் என்ற யோசனையும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. நடமாட முடிந்த, துடிப்பான தலைவர்கள் கட்சிக்கு அவசியம்.

காங்கிரஸின் மொத்த நிர்வாகிகளில் 50 சதவீதம் பேர் 50 வயதுக்கும் குறைவாக இருக்க வேண்டும், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், பட்டியல் இனத்தவர், பழங்குடிகள், சிறுபான்மைச் சமூகத்தவர், மகளிர் ஆகியோருக்கு கட்சியில் அவரவர் மக்கள் தொகைக்கேற்ப நிர்வாகப் பதவிகளை ஒதுக்க வேண்டும் என்ற முக்கிய முடிவு எடுக்கப்பட்டிருக்கிறது. அரசுத் துறைகளிலும் அரசு வேலைகளிலும் பிற்படுத்தப்பட்டவர்கள், பட்டியல் இனத்தவர், பழங்குடிகள், சிறுபான்மையினத்தவருக்கான இடங்களை மேலும் அதிகப்படுத்தி சமூக நீதி வழங்க வேண்டும் என்ற யோசனையும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அரசு வேலைவாய்ப்புகளில் என்றில்லாமல் தனியார் துறையிலும் சட்டங்கள் மூலம் வேலைவாய்ப்புகளுக்கு இடஒதுக்கீடு தேவை என்ற கருத்தும் வலியுறுத்தப்பட்டிருக்கிறது.

தமிழ்நாடு உள்பட தென் மாநிலங்களில் தோன்றியுள்ள சமூக நீதி விழிப்புணர்வு இப்போது அகில இந்திய அளவில் பரவி வலுப்பட்டுவருகிறது என்பதற்கு இது நல்ல உதாரணம். காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் மக்கள் நல நடவடிக்கைகளுக்கு அதிக நிதி ஒதுக்க வேண்டும், விலையில்லாத் திட்டங்களை அமல் செய்ய வேண்டும், சமூக – பொருளாதார ஏற்றத் தாழ்வுகளைக் குறைக்க வேண்டும் என்றெல்லாம் ஆக்கபூர்வமாக சிந்திக்கப்பட்டிருக்கிறது.

இந்துத்துவா விவாதம்

அயோத்தி, மதுரா, காசி ஆகிய மூன்று மாநகரங்களில் இந்து வழிபாட்டுத் தலங்களை மீட்க போராட்டம் நடத்தி கட்சியை வளர்த்த பாஜக இப்போது ஞானவாபியில் உள்ள மசூதி மீது கண் வைத்திருக்கிறது. நரசிம்ம ராவ் பிரதமராக இருந்தபோது நாடாளுமன்றத்தில் இயற்றப்பட்ட வழிபாட்டுத் தலங்கள் சட்டம் 1991 அப்படியே கடைப்பிடிக்கப்பட வேண்டும். அயோத்தி ராமர் ஆலய வழக்கில் உச்ச நீதிமன்றமும் இந்தச் சட்டத்தை அங்கீகரித்து, இந்தியாவில் இனி வழிபாட்டுத் தலங்கள் தொடர்பாக பிரச்சினைகளைக் கிளப்பக்கூடாது என்று அறிவுறுத்திய பிறகே சமரசம் மூலம் அயோத்தியில் ராமருக்கு கோயில் கட்டவும் இஸ்லாமியர்கள் மசூதியை வேறிடத்தில் கட்டவும் அனுமதி வழங்கியது. அந்தப் பிரச்சினை தீர்ந்து அங்கு கோயில் கட்டும் வேலை நடந்துவரும் வேளையில் காசியில் ஞானவாபி மசூதியின் வெளிப்புறச் சுற்றுச்சுவரில் உள்ள இந்து பெண் தெய்வங்களை வழிபட அனுமதிக்க வேண்டும் என்று புதிய பிரச்சினையை கிளப்பி வருகின்றன பாஜக -ஆர்எஸ்எஸ் உள்ளிட்ட சங்கப் பரிவாரங்கள். இதை சுட்டிக்காட்டிப் பேசிய சிதம்பரம், இதற்கு அனுமதி தரக்கூடாது என்று வாதிட்டிருக்கிறார்.

இந்துத்துவ சிந்தனையை பாஜக உரிமை கொண்டாடுவதற்கு எதிராக நாமும் கடவுள் நம்பிக்கையுள்ள இந்துக்கள்தான் என்று எதிர்ப் பிரச்சாரம் செய்ய வேண்டும் என்று சிலர் தீவிரமாக வலியுறுத்தினர். வேறு சிலர் அதைக் கடுமையாக எதிர்த்தனர். நாமும் இந்துத்துவர்கள்தான் என்றால் நமக்கும் பாஜகவுக்கும் வேறுபாடு என்ன, நாம் ஏன் தனியாக கட்சி நடத்த வேண்டும் என்று அவர்கள் காட்டமாகக் கேட்டனர். காங்கிரஸ் தன்னுடைய கொள்கையிலிருந்து ஒரு நாளும் விலகக் கூடாது. நாம் அனைத்து மதங்களையும் சமமாக பாவிக்கும் மதச்சார்பின்மையைக் கடைப்பிடிக்க வேண்டும். மகாத்மா காந்தி உயிரோடு இருந்திருந்தால் என்ன முடிவெடுப்பாரோ அதே முடிவையே நாம் எடுக்க வேண்டும் என்று பெரும்பாலானவர்கள் கூறினர். அது அப்படியே ஏற்கப்பட்டது.

இந்துத்துவக் கொள்கையை அலட்சியம் செய்ய வேண்டியத் தேவையில்லை, அதில் அவர்கள் அரசியல் ஆதாயம் பெறாதபடிக்கு நாமே முதலில் அவற்றையெல்லாம் அமல்படுத்திவிட்டால் அவர்களுக்கு வாய்ப்பே இல்லாமல் போய்விடும் என்று சத்தீஸ்கர் முதலமைச்சர் பூபேஷ் பகேல் சுட்டிக்காட்டினார். தன்னுடைய மாநிலத்தில் ராமாயண காலத்தில் ராம – லட்சுமணர்கள் உலாவிய வனப்பகுதி என்று மக்களால் காலம் காலமாக நம்பப்படும் பகுதிகளில் ஆலயங்களைப் புதுப்பித்துக் கட்டி, சாலை வசதிகளையும் தங்குமிட வசதிகளையும் செய்து தந்து வழிபட அனுமதித்ததால் அங்கு பதற்றமோ அரசியல் செய்வதற்கான வாய்ப்போ இல்லாமல் போனதைச் சுட்டிக்காட்டினார். இந்துத்துவப் போக்குக்கு ஆதரவாகச் செயல்பட்டு சிறுபான்மைச் சமூகத்தவரை தங்களிடமிருந்து மேலும் ஒதுக்கிவிடக் கூடாது என்றும் பலர் எச்சரித்துள்ளனர்.

பொருளாதாரக் கொள்கை

மோடி அரசின் பொருளாதாரக் கொள்கைகளால் நாடு மிகவும் துயரங்களில் ஆழ்ந்து வருவதாக சிதம்பரம் தலைமையிலான துணைக் குழு விவாதத்தில் விரிவாகப் பேசப்பட்டது. பணமதிப்பு நீக்கம், பொது சரக்கு சேவை வரி அமல், பெட்ரோல்-டீசல்-சமையல் விலைவாயு விலை தொடர் உயர்வு, பெருந்தொற்றுக்கால முடக்க நடவடிக்கைகள், பொருளாதாரத்தை முடுக்கிவிட வேண்டி எடுக்கப்பட்டிருக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து விரிவாக ஆராயப்பட்டது. உக்ரைன் – ரஷ்யா போரால் உலகம் முழுவதும் உணவு தானியங்களுக்கு தேவை அதிகரித்த நிலையில் இந்தியாவிலிருந்து கோதுமை ஏற்றுமதிக்கு திடீர் தடை விதித்திருப்பது விவசாயிகளின் நலனுக்கு எதிரானது என்று சிதம்பரம் சுட்டிக்காட்டியிருக்கிறார்.

இந்தியாவின் இந்த முடிவை ஜி-7 நாடுகளும் கண்டித்துள்ளன. வறுமை, வேலையில்லாத் திண்டாட்டம், விலைவாசி உயர்வு ஆகிய பிரச்சினைகள் மக்களை வாட்டி வதைத்துக்கொண்டிருக்கும் வேளையில் அவற்றைப் போக்கும் வழி தெரியாமல் மோடி தலைமையிலான அரசு திணறுவதாக மாநாட்டில் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. இதை திசை திருப்புவதற்காகவே ஹிஜாப், மசூதிகளில் ஒலிபெருக்கி மூலம் ஆசான் கூவுவது, ஞானவாபி மசூதி போன்ற பிரச்சினைகள் பெரிதுபடுத்தப்படுகின்றன என்று சுட்டிக்காட்டப்பட்டது.

23 தலைவர்களின் கோரிக்கை நிராகரிப்பு

கட்சியின் முக்கிய விவகாரங்களில் உடனுக்குடன் கூடி விவாதித்து முடிவெடுக்க ‘காங்கிரஸ் ஆட்சிமன்றக் குழு’ (காங்கிரஸ் பார்லிமென்டரி போர்டு) என்ற அமைப்பை மீண்டும் ஏற்படுத்த வேண்டும் என்று குலாம் நபி ஆசாத், கபில் சிபல் உள்ளிட்ட 23 காங்கிரஸ் தலைவர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர். அந்த கோரிக்கையை உதய்பூரில் கூடிய ‘காங்கிரஸ் செயற்குழு’ (காங்கிரஸ் காரியக் கமிட்டி) நிராகரித்துவிட்டது. அதற்குப் பதிலாக சிறிய அளவிலான குழுவை நியமித்துக்கொள்ளலாம் என்று தீர்மானிக்கப்பட்டது. தேசிய அளவிலும் மாநிலங்களிலும் காங்கிரஸ் கட்சிக்கு தனியாக ‘அரசியல் விவகாரக் குழு’ ஏற்படுத்தப்படும். இது அடிக்கடி கூடி தேசிய – மாநில அரசியல் விவகாரங்களை விவாதிக்கும்.

காங்கிரஸ் தொண்டர்களுக்கும் நிர்வாகிகளுக்கும் சட்டமன்ற – நாடாளுமன்றங்களுக்குப் புதிதாகத் தேர்ந்தெடுக்கப்படும் உறுப்பினர்களுக்கும் பயிற்சி தர கட்சிக்குள் தேசிய அளவில் பயிற்சி நிலையம் ஏற்படுத்தப்படும். இப்போதைக்கு கேரளத்தில் உள்ள ராஜீவ் காந்தி வளர்ச்சிக்கான ஆய்வுக் கழகத்தில் பயிற்சி தரப்படும். இது திருவனந்தபுரத்தில் இருக்கிறது. கேரள பிரதேச காங்கிரஸ் கட்சி இதை நிர்வகிக்கிறது. கட்சித் தொண்டர்களும் நிர்வாகிகளும் உடனுக்குடன் தகவல்களைப் பரிமாறிக்கொள்ள ஒவ்வொரு மாநிலத்திலும் கட்சிக்குள் தகவல் தொடர்பு வசதிகளை ஏற்படுத்த முடிவு செய்யப்பட்டிருக்கிறது. இனி தேர்தல்களைச் சந்திப்பதற்காக ஒவ்வொரு மாநிலத்திலும் ‘தேர்தல் நிர்வாகக் குழு’ அமைக்கப்படும்.

காங்கிரஸ் கட்சிக்குப் புத்துயிர் அளிக்கவும் கொள்கைகளை வகுக்கவும் மக்களுடன் தொடர்பு கொள்ளவும் எடுக்கப்படும் முடிவுகள் ‘உதய்ப்பூர் மாநாட்டுப் பிரகடனம்’ (அறிவிக்கை) என்ற பெயரில் வெளியிடப்படும்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in