
தமிழ்நாடு போக்குவரத்துத்துறையில் பி.எஸ்4 இன்ஜின் வாகனங்களை முறைகேடாக பதிவு செய்த விவகாரத்தில் போக்குவரத்துத்துறை அறிக்கையின் அடிப்படையில் விசாரணை நடத்த தமிழக டிஜிபிக்கு உள்துறை செயலாளர் உத்தரவிட்டுள்ளார்.
சுற்றுச்சூழல் மாசுவை கட்டுப்படுத்த மத்திய அரசின் மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் கடந்த 2000-ம் ஆண்டு பி.எஸ் என்ற புதிய கொள்கை ஒன்றை கொண்டு வந்தது. அந்த கொள்கையின்படி வாகனங்களில் இருந்து வரும் மாசுவை கட்டுப்படுத்த கடந்த 2020-ம் ஆண்டு மார்ச் மாதத்திற்கு பிறகு பி.எஸ்4 இன்ஜின் ரக வாகனங்களை பயன்படுத்தவும், வாகனப்பதிவு செய்யவும் தடை விதித்தது உத்தரவிட்டது. அதனால் பல வாகன உற்பத்தி நிறுவனங்கள் தயார் செய்த பி.எஸ்4 ரக இன்ஜின் பொருத்திய வாகனங்கள் தேக்கமடைந்தது.
இந்த நிலையில் தேக்கமடைந்த பல பி.எஸ்4 இன்ஜின் ரக வாகனங்கள் சட்டவிரோதமாக விற்பனை செய்யப்பட்டு, ஆர்.டி.ஓ அலுவலகங்களில் பதிவு செய்யப்பட்டதாக கடந்த மூன்று மாதங்களாக தொடர்ந்து புகார்கள் வந்த வண்ணம் இருந்தது. இந்த புகாரின் அடிப்படையில் போக்குவரத்துத்துறை நடத்திய விசாரணையில், ஆர்.டி.ஓ அலுவலகங்களில் பொதுமக்கள் பதிவு செய்யாத 8 கூட்டுத்தொகை கொண்ட வாகன எண்களை முறைகேடாக பி.எஸ்4 ரக இன்ஜின் வாகனங்களில் 2020-ம் ஆண்டு போல் பதிவு செய்யப்பட்டிருப்பது விசாரணையில் தெரியவந்தது. மேலும் இது போன்று தமிழகம் பல்வேறு ஆர்.டி.ஓ அலுவலகங்களில் முறைகேடாக 399 வாகனங்கள் பதிவு செய்யப்பட்டிருப்பதாக விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது.
இந்த மோசடி தொடர்பாக போக்குவரத்துத்துறை செயலாளர் அறிக்கையை தயார் செய்து, இது குறித்து நடவடிக்கை எடுக்குமாறு உள்துறை செயலாளருக்கு கடிதம் அனுப்பி உள்ளார். உள்துறை செயலாளர் இந்த அறிக்கையை தமிழக டிஜிபிக்கு அனுப்பி விசாரணை நடத்தும் படி உத்தரவிட்டுள்ளார். இதனையடுத்து பி.எஸ்4 இன்ஜின் வாகனங்கள் எத்தனை ஆர்.டி.ஓ அலுவலகங்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது என்றும், இந்த முறைகேட்டில் ஈடுபட்ட வாகன உற்பத்தியாளர்கள் தொடர்புடைய நிறுவனங்கள், முகவர்கள் மற்றும் ஆர்.டி.ஓ அலுவலக அதிகாரிகள் உள்ளிட்ட போக்குவரத்துத்துறை அதிகாரிகளிடம் விசாரணை நடத்த போலீஸார் திட்டமிட்டுள்ளனர்.