'வீட்டைக் காலி செய்யவில்லை என்றால் என்னுடைய வேலையைக் காட்டுவேன்': மிரட்டும் இன்ஸ்பெக்டர் வீடியோ வைரல்

'வீட்டைக் காலி செய்யவில்லை என்றால் என்னுடைய வேலையைக் காட்டுவேன்': மிரட்டும் இன்ஸ்பெக்டர் வீடியோ வைரல்

வீட்டைக் காலி செய்யச் சொல்லி பெண்ணை ஆபாசமாக மிரட்டும் இன்ஸ்பெக்டரின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

சென்னை சேத்துப்பட்டு மங்களபுரம் 8-வது தெரு பகுதியைச் சேர்ந்தவர் சகுந்தலா(52). இவர் அப்பகுதியல் 2018-ம் ஆணடு முதல் குடும்பத்தாருடன் வாடகை வீட்டில் வசித்து வருகிறார். கடந்த 6 மாதங்களுக்கு முன்பு வீட்டு உரிமையாளர் வரலட்சுமி, திடீரென வீட்டைக் காலி செய்யுமாறு சகுந்தலாவிடம் கூறியுள்ளார்.

பல இடங்களில் வீடு வாடகைக்கு தேடி கிடைக்கவில்லை என்பதால், வரலட்சுமியிடம் சென்று மகளுக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளதால் திருமணம் முடிந்ததும் வீட்டைக் காலி செய்வதாக சகுந்தலா கூறியுள்ளார். ஆனால், இதை வரலட்சுமி ஒத்துக்கொள்ளவில்லை. இதனால் இருதரப்பினருக்கும்இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து நேற்று முன்தினம் வரலட்சுமி சகுந்தலா வீட்டிற்கு சென்று வீட்டைக் காலி செய்யுமாறு கூறியுள்ளார்.அப்போது பேச்சுவார்த்தை முற்றி தகராறு ஏற்பட்டுள்ளது. உடனே வரலட்சுமி செல்போனில் யாரிடமோ பேசி சம்பவ இடத்திற்கு வருமாறு கூறியுள்ளார். உடனடியாக, சம்பவ இடத்திற்கு சாதாரண உடையணிந்து போலீஸ் வாகனத்தில் வந்து இறங்கிய ஒருவர் ஒரு கோடி ரூபாய்க்கு இந்த வீட்டை தான் வாங்கி விட்டதாகவும், மூன்று நாட்களில் வீட்டைக் காலி செய்ய வேண்டும் என மிரட்டியுள்ளார்.

அத்துடன் சகுந்தலாவின் கணவரை ஒருமையில் பேசியுள்ளார். அதற்கு சகுந்தலாவின் மகள் , வீடு பார்த்து கொண்டு இருப்பதாகவும், கிடைத்தவுடன் காலி செய்கிறோம் என்று கூறியுள்ளார். அதற்கு அந்த நபர் வீட்டை காலி செய்யவில்லை என்றால், என்னுடைய வேலையை நான் காட்டவேண்டுமா என ஆபாசமாக பேசினார். உடனே சகுந்தலா போலீஸில் புகார் அளிப்பபேன் என கூறியுள்ளார். அதற்கு," என் பெயர் அம்பேத்கர், எம்கேபி நகர் காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருகிறேன். என்கிட்டையே போலீஸ் பத்தி பேசுறியா? யார்கிட்ட வேணாலும் சொல்லி என்னை டிரான்ஸ்பர் செய்து விடு பார்க்கலாம்" என மிரட்டும் தொனியில் பேசியுள்ளார். " எத்தனை போலீஸை வேண்டுமானாலும் அழைத்து வா" என அடுத்து ஆபாச வார்த்தைகளில் அர்ச்சனை செய்துள்ளார்.

இதுகுறித்து சேத்துப்பட்டு காவல் நிலையத்தில் சகுந்தலா மற்றும் அவரது குடும்பத்தினர் புகார் அளித்துள்ளனர். காவல் ஆய்வாளர் ஆபாசமாக, மிரட்டும் வகையில் பேசும் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இச்சம்பவம் தொடர்பாக காவல் ஆய்வாளர் அம்பேத்கரிடம் கேட்ட போது, " சேத்துப்பட்டில் 5 வீடுகள் உள்ள கட்டிடத்தை மூன்று மாதங்களுக்கு முன்பு வாங்கியுள்ளேன். வீட்டில் வாடகைக்கு இருந்த இரண்டு குடும்பத்தினரை தவிர அனைவரும் காலி செய்து விட்டனர். சகுந்தலா குடும்பத்தினர் தொடர்ந்து காலம் தாழ்த்தி வந்ததால் நேரில் சென்று கேட்டேன்" என்று கூறினார். இந்த புகார் குறித்து போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in