1 லட்சம் முதலீடு செய்தால் 10 மாதத்தில் 2 லட்சம் தருவோம்: நூதன மோசடி செய்த தம்பதி சிக்கினர்

 கைது
கைது1 லட்சம் முதலீடு செய்தால் 10 மாதத்தில் 2 லட்சம் தருவோம்: நூதன மோசடி செய்த தம்பதி சிக்கினர்

தங்கள் நிதி நிறுவனத்தில் ஒரு லட்சம் ரூபாய் முதலீடு செய்தால் பத்தே மாதத்தில் இரண்டு லட்சமாகத் திருப்பித் தருவதாக நூதன மோசடி செய்த தம்பதியை போலீஸார் கைது செய்தனர்.

திருநெல்வேலி பெருமாள்புரம் காமராஜர் சாலையில் தனியார் நிதி நிறுவனம் ஒன்று இயங்கி வருகிறது. இந்த நிறுவனத்தை ரகுநாத் என்ற சுரேஷ், மற்றொரு சுரேஷ், முருகானந்தம், வடிவேலு, ஆனந்தராஜ், ஆஷிகா ஆகியோர் சேர்ந்து நடத்தி வருகின்றனர். இந்த நிறுவனம் அண்மையில் ஒரு கவர்ச்சிகரமான அறிவிப்பை வெளியிட்டது. அதாவது இதில் ஒரு லட்சம் ரூபாய் முதலீடு செய்தால் பத்தே மாதத்தில் அது இரட்டிப்பாகத் திருப்பிக் கிடைக்கும். அதாவது, ஒவ்வொரு 15 நாள்களுக்கு ஒருமுறையும் முதலீடு செய்தவருக்கு 10 ஆயிரம் ரூபாய்க் கிடைக்கும்.

அந்தவகையில் பத்து மாதங்களில் 20 முறை தலா பத்தாயிரம் வீதம் 2 லட்சம் ரூபாய் கிடைக்கும் என்பதுதான் அது. அந்தப் பணத்தை நிதி நிறுவனம் வேறுசில தொழில்களில் முதலீடு செய்வதாகவும் அதில் நல்ல வருவாய்க் கிடைப்பதாகவும் சொல்லப்பட்டது. இதுதொடர்பாக நிதி நிறுவனம் தன்னை ஏமாற்றியதாக ஆல்வின் பிரபு என்பவர் திருநெல்வேலியில் உள்ள பொருளாதாரக் குற்றப்பிரிவு போலீஸில் புகார் கொடுத்தார். இவ்வழக்கில் மோசடி நிரூபணம் ஆனது. இதனால் பொருளாதாரக் குற்றப்பிரிவு போலீஸார் நிதி நிறுவனத்தை நடத்திய ரகுநாத் என்ற சுரேஷ், அவரது மனைவி ஆஷிகா ஆகியோரைக் கைது செய்தனர். தப்பியோடிய மற்ற பங்குதாரர்களையும் தேடிவருகின்றனர். இதேபோல் இந்த நிதி நிறுவனத்தில் பணம் போட்டு ஏமாந்தவர்கள் நெல்லை மாவட்ட பொருளாதாரக் குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் நேரடியாகப் புகார் அளிக்கலாம் எனவும் கூறப்பட்டுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in