`தேங்காய் பூவை சாப்பிட்டால் 26 வகை நோய்கள் குணமாகிறது'- வியாபாரி சொல்லும் புதுத் தகவல்

`தேங்காய் பூவை சாப்பிட்டால் 26 வகை நோய்கள் குணமாகிறது'- வியாபாரி சொல்லும் புதுத் தகவல்

மதுரையில் சாலையோரங்களில் விற்கப்படும் தேங்காய் பூ விற்பனை வாகன ஓட்டிகளை வெகுவாக ஈர்த்துள்ளது. வெளியூர் வியாபாரிகள் முகாமிட்டு விற்கின்றனர்.

பூமிக்கு கீழ் விளையும் உணவு வகையில் தேங்காய் பூவும் ஒன்று. நன்கு விளைந்த தேங்காய்களை சேகரித்து, தென்னை நாற்றுகளை உருவாக்குதல் போன்று மணற் பாங்கான இடத்தில் பூமிக்கடியில் புதைத்து வைத்து, குறிப்பிட்ட நாளுக்கு பிறகு பூவாக உருவாகின்றனர். தேய்காய் மேலுள்ள ஓட்டை பிரித்தெடுத்து, பூக்களை மட்டும் உணவாக சாப்பிடுவது வழக்கம். பெரும்பாலும், ஆந்திரா மாநில கோதாவரி போன்ற இடங்களில் அதிகமாக விளைகிறது என விற்பனையாளர்கள் கூறுகின்றனர்.

தற்போது, தேங்காய் பூக்கள் விற்னை சீசனாக கருதும் நிலையில், சென்னை, திருத்தணி பகுதியைச் சேர்ந்த சில வியாபாரிகள் மதுரையில் கருப்பாயூரணி, ரிங் ரோடு, மாட்டுத்தாவணி பகுதியில் சாலையோரத்தில் தேங்காய் பூக்களை விற்கின்றனர். தென்னை கன்று முளைவிட்ட நிலையில், தேய்காயில் இருந்து பூக்களை பிரித்தெடுத்து விற்கின்றனர். பார்க்க வித்தியாசமாக இருப்பதால் வாகனங்களில் செல்வோரை வெகுவாக ஈர்க்கப்படுகின்றனர். மஞ்சள் காமாலை உள்ளிட்ட வயிறு தொடர்பான கோளாறுகளை நீக்கும் மருந்தாக இருக்கிறது என வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.

வியாபாரி ஜெயகுமார் கூறுகையில், "தமிழக பகுதியில் தேங்காய் பூ அதிகமாக விளையாது. வைசாக், கோதாவரி ஆற்றப்படுகை பகுதியில் விவசாயமாகவே சாகுபடி செய்கின்றனர். எண்ணெய், நார்சத்து மிகுந்த தேய்காய் பூவை சாப்பிட்டால் தைராய்டு, வயிற்று புண், மஞ்ச காமாலை, மாதவிடாய் கோளாறு உள்ளிட்ட 26 வகை நோய்கள் குணமாகிறது. காலையில் வெறும் வயிற்றில் 7 நாள் சாப்பிடவேண்டும். மதுரை, திருச்சி போன்ற பகுதியில் தேங்காய் பூ விற்பனை பெரிதாக இல்லை. இதனால் கோதாவரி பகுதியில் இருந்து மொத்தமாக வாங்கி வந்து விற்கிறோம். அரிதாக பார்க்கப்படுவதால் பலர் விரும்பி வாங்கிச் சாப்பிடுகின்றனர். வீட்டுக்கும் வாங்கிச் செல்கின்றனர்" என்றார்.

உணவு நிபுணர் வசந்தா கூறுகையில், ‘‘பொதுவாக இளநீர் உடலுக்கு ஆரோக்கியமானது. தேங்காய் பால் வயிற்று புண்ணை குணப்படுத்தும். செவ்வெளநீரை தொடர்ந்து 48 நாள் குடித்தால் அல்சர் நீங்கும். இதன்படி, தேய்காய்களில் இருந்து கிடைக்கும் தேங்காய் பூ போன்ற பொருட்கள் மனித உடலுக்கு நன்மை தரும். சிறுநீரக தொற்றை குணப்படுத்தும், நச்சுகளை வெளியேற்ற உதவும். இருப்பினும், தேங்காய் பூ சாப்பிட்டால் பக்கவிளைவு இருக்காது’’ என்றார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in