`இந்த வைரஸ் ஒருவரை தாக்கினால் 18 பேரை பாதிக்கும்'- எச்சரிக்கும் அமைச்சர் மா.சுப்பிரமணியன்

`இந்த வைரஸ் ஒருவரை தாக்கினால் 18 பேரை பாதிக்கும்'- எச்சரிக்கும் அமைச்சர் மா.சுப்பிரமணியன்

"பி.எஃப்7 வைரஸ் ஒருவருக்கு பாதிப்பு ஏற்பட்டால் அவர்கள் மூலம் 18 பேரை தாக்கும் என்றும் சொல்லப்படுகிறது. இதனால் பொதுமக்கள் முகக்கசவம் அணிந்து கொள்ள வேண்டும்" என்று சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கேட்டுக் கொண்டார்.

சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், சீனாவில் இருந்து பெண் ஒருவர் தனது 2 குழந்தைகள் உடன் மதுரை வந்துள்ளனர். அவர்களுக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. சீனா, தென்கொரியா வழியாக வந்தவர்களை பரிசோதனை செய்ததில் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. பாதிப்புக்கு உள்ளான இருவரும் விருதுநகரில் உள்ள அவரது வீட்டில் தனிமைபடுத்தபட்டு உள்ளனர். அவர்களை அழைத்து சென்றவரையும் பரிசோதனை செய்ய சொல்லி இருக்கிறோம். அவர்கள் இருவருக்கும் சிறிய அளவில் மட்டுமே பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கரோனா விதிமுறை என்பது 100 சதவீதம் அமலில் இருந்து வருகிறது. கோயம்பேடாக இருந்தாலும் சரி, மக்கள் அதிகமாக கூடும் இடம் எதுவாக இருந்தாலும் சரி, தியேட்டர்கள், வணிக வளாகங்கள், பொது நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்ற இடங்கள், சமுதாய நிகழ்வுகள் நடைபெறும் இடங்கள், அதேபோல் கோயில் திருவிழாக்கள், 1-ம் தேதிக்கான புத்தாண்டு கொண்டாட்டங்கள், இப்படி எதுவாக இருந்தாலும் கரோனா விதிமுறைகளை கடைப்பிடித்து செய்வது என்பது மிக நல்லது. ஆரோக்கியத்தோடு இருந்தால்தான் கொண்டாட்டங்கள் நமக்கு பலன் அளிக்கும். எனவே இந்த கொண்டாட்டங்களின் போது தனிமனித இடைவெளியை கடைப்பிடிப்பதும், முகக் கவசங்கள் அணிவதும், சானிடைசர் செய்து கொள்வதை மக்கள் ஒவ்வொருவரும் உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.

தற்போது உருமாற்றம் பெற்றுள்ள வைரஸ் வேகமாக பரவும் தன்மை கொண்டது என்று சொல்லப்படுகிறது. ஏற்கெனவே ஒமைக்ரான் பாதிப்பு ஒருவருக்கு ஏற்பட்டால் 10 பேரை தாக்கும் நிலையில் இன்று உருமாறியிக்கும் பி.எஃப்7 வைரஸ் ஒருவருக்கு பாதிப்பு ஏற்பட்டால் அவர்கள் மூலம் 18 பேரை தாக்கும் என்றும் சொல்லப்படுகிறது. இதனால் பொதுமக்கள் முகக்கசவம் அணிந்து கொள்ள வேண்டும்.

மத்திய அரசு வழங்கிய தடுப்பூசியில் தமிழகத்தில் 3 லட்சம் தடுப்பூசி கையிருப்பு உள்ளது. புத்தாண்டு கொண்டாட்டதிற்கு சுய கட்டுப்பாடு தான் அவசியம். கட்டுப்பாடுகள் எப்போது விதிக்கப்பட வேண்டும் என்ற நிலை வருகிறதோ அப்போது மத்திய சுகாதாரதுறை பரிந்துரை செய்யும் பட்சத்தில் அதனை இங்கு செயல்படுத்துவோம்" என்றார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in