
முதலமைச்சர் நேர்மையானவராக இருந்தால் அமைச்சரவையில் இருந்து செந்தில் பாலாஜியை நீக்கியிருக்க வேண்டும் என முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
சேலம் மாவட்டம் ஓமலூரில் செய்தியாளர்களை சந்தித்த எடப்பாடி பழனிசாமி, "காவிரி நீர் விவகாரத்தில் உச்ச நீதிமன்ற உத்தரவை கர்நாடகம் பின்பற்ற வேண்டும். கொரோனா காலத்தில் இக்கட்டான நிலையிலும் அரசு மருத்துவமனைகளில் சிறப்பான சிகிச்சை அளித்தோம். ஆனால் தற்போது மருத்துவமனைக்கு சென்றால் சிகிச்சை கிடைப்பதில்லை என்பதே எதார்த்தம். சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையில் கை அகற்றப்பட்ட குழந்தைக்கு தேவையான உதவிகளை அரசு செய்ய வேண்டும். எதிர் காலங்களில் இது போன்ற நிகழ்வுகள் ஏற்படாமல் அரசு பார்த்துக்கொள்ள வேண்டும்.
முதல்வர் நேர்மையானவராக இருந்தால் செந்தில் பாலாஜியை அமைச்சரவையில் இருந்து நீக்கியிருக்க வேண்டும். தி.மு.க-வின் பி டீமாக ஓ.பி.எஸ் செயல்பட்டு கட்சிக்கு களங்கம் ஏற்படுத்துகிறார். மாநில அரசு மது விற்பனையை படிப்படியாக குறைப்பதுடன், மதுபழக்கத்தினால் ஏற்படும் தீமைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்’’ என்றார்.