சிலைக்கடத்தல் மன்னன் சுபாஷ்கபூர் விவகாரம்: தமிழக அரசுக்கு மத்திய அரசு கடிதம்

சிலைக்கடத்தல் மன்னன் சுபாஷ்கபூர் விவகாரம்: தமிழக அரசுக்கு மத்திய அரசு கடிதம்

ஜெர்மன் நாட்டு குடிமகனான சிலைக்கடத்தல் மன்னன் சுபாஷ்கபூரை ஒப்படைக்காததால் இந்தியா- ஜெர்மன் நாட்டுகளுக்கு இடையே பரஸ்பர உறவில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தில் இருந்து தொன்மையான சிலைகளை வெளிநாட்டுக்கு கடத்தி விற்பனையில் ஈடுபட்டிருந்த சர்வதேச சிலை கடத்தல் மன்னன் சுபாஷ் கபூரை இன்டர்போல் உதவியுடன் சிபிஐ ஜெர்மனியில் வைத்து கைது செய்தது. கைது செய்யப்பட்ட சுபாஷ் கபூரை சிபிஐ கடந்த 2011-ம் ஆண்டு தமிழக போலீஸாரிடம் ஒப்படைத்தனர். சுபாஷ் கபூர் மீது தமிழகத்தில் மட்டும் சிலை கடத்தல் தொடர்பாக ஐந்து வழக்குகள் பதிவு செய்யப்பட்டு அது தொடர்பான நீதிமன்ற விசாரணை நடைபெற்று வருகிறது. அதில் குறிப்பாக உடையார்பாளையம் சிலை கடத்தல் வழக்கில் கடந்த 2017-ம் ஆண்டு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், ஜெர்மன் குடிமகனான சுபாஷ் கபூரை இந்திய அரசு கேட்டுக் கொண்டதற்கினங்க ஜெர்மனி அரசு கடந்த 2011-ம் ஆண்டு இந்தியாவிடம் ஒப்படைத்தது. ஆனால் 10 ஆண்டுகள் மேலாகியும் வழக்கு விசாரணை முடிக்கப்படாததால் சுபாஷ் கபூரை திரும்ப அனுப்புமாறு ஜெர்மனி தெரிவித்துள்ளது. மேலும் வழக்கு தொடர்ந்து காலதாமதம் ஆவதால், ஜெர்மனி அரசு குற்றவாளிகளை பரிமாறிக் கொள்வதற்கான சட்டபூர்வமான பரஸ்பர ஒப்பந்தத்தை முடித்துக் கொள்வதாக தெரிவித்துள்ளதால் இந்திய அரசுக்கு பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் மத்திய வெளியுறவுத்துறை செயலாளர் வின்யா குவார்ட்டா இந்த விவகாரம் தொடர்பாக தமிழக தலைமைச் செயலாளர் இறையன்புக்கு கடிதம் எழுதியுள்ளார். இதனை தொடர்ந்து உடையார்பாளையம் கடத்தல் வழக்கு குறித்து விரைவாக விசாரணையை முடிக்குமாறு சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸார் சிறப்பு நீதிமன்றத்திற்கு கோரிக்கை வைத்துள்ளனர். ஒருவேளை உடையார்பாளையம் கடத்தல் வழக்கில் சுபாஷ்கபூருக்கு தண்டனை வழங்கப்பட்டாலும், ஏற்கெனவே அவர் 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை அனுபவித்திருப்பதால் அதனை கருத்தில் கொண்டு அவர் விடுதலை செய்யவும் வாய்ப்பு உள்ளதாக சட்ட வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.

அப்படி விடுதலை செய்யும் பட்சத்தில் அவர் உடனடியாக ஜெர்மனிக்கு திரும்பி செல்வதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளதால் அவர் மீது உள்ள மற்ற நான்கு வழக்குகளில் அவரிடம் விசாரணை நடந்ததற்கான வாய்ப்புகள் மிக குறைவு என சிலை கடத்தல் தடுப்பு பிரிவு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. பிரதமர் நரேந்திர மோடி இன்னும் சில தினங்களில் ஜெர்மனி நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார். அவரது சுற்றுப்பயணத்துக்கு முன்னதாக இந்த பிரச்சினைகளை முடிவுக்கு கொண்டு வரும் வேலையில் அரசு அதிகாரிகள் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர். ஒருவேளை பிரச்சினைகள் தீர்க்க முடியாதபட்சத்தில் பிரதமர் மோடி பயணத்தின் போது இது பின்னடைவாக பார்க்கப்படும் என கருதப்படுகிறது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in