பள்ளி மாணவிகளைக் குறிவைத்து ஐஸ் போதைப்பொருள் விற்பனை: இலங்கையில் பெருகும் போதை கலாச்சாரம்

பள்ளி மாணவிகளைக் குறிவைத்து ஐஸ் போதைப்பொருள் விற்பனை:  இலங்கையில் பெருகும் போதை கலாச்சாரம்

இலங்கையில் பள்ளி மாணவ, மாணவிகளைக் குறிவைத்து ஐஸ் போதைப்பொருள் விற்பனை அதிகரித்துள்ளது காவல் துறையினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி காரணமாக ஏற்பட்ட மக்கள் போராட்டம் அங்கு ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தியது. ஆனாலும் அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வைக் கட்டுப்படுத்த முடியவில்லை. இதன் காரணமாக ஏராளமானோர் வெளிநாடுகளுக்கு அகதிகளாக இடம் பெயர்ந்துள்ளனர்.

இந்த நிலையில், மாணவ, மாணவிகளிடையே ஐஸ் போதைப்பொருள் விற்பனை அதிகரித்துள்ளது காவல் துறை மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, பள்ளி மாணவிகளைக் குறிவைத்தே இந்த போதைப்பொருள் விற்பனை நடைபெறுவதாக குற்றம் சாட்டப்படுகிறது. இரும்புப் பொருட்களை ஏற்றி வரும் வாகனங்களில் ரகசியமாக ஐஸ் போதைப்பொருள் பதுக்கப்பட்டு அது நகரத்திற்குள் கொண்டு செல்லப்படுகிறது. இதன் பின் பள்ளிகளின் வாசலிலேயே இந்தப் போதைப்பொருள் விற்பனை செய்யப்படுகிறது.

கடும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியிலும் இந்த போதைப்பொருளை வாங்க பள்ளி மாணவ, மாணவிகளிடையே போட்டி நிலவுகிறது. இதன் காரணமாக சத்தமில்லாமல் குற்ற சமூகம் உருவாகி வருவது சமூக ஆர்வலர்களிடையே பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து காவல் துறையினர் கூறுகையில்," இலங்கையில் பள்ளி மாணவர்களிடையே ஏற்பட்டுள்ள ஐஸ் போதைப்பொருள் விற்பனை பெரும் தலைவலியாக மாறியுள்ளது. எனவே, பள்ளி மாணவர்கள் பணம் கேட்டால், அவர்கள் எதற்காக கேட்கிறார்கள் என்று பெற்றோர் கவனமாக இருக்க வேண்டும். போதைப்பொருள் பயன்படுத்துவதால் மாணவர்களிடையே ஏற்படும் மாற்றங்களைப் பெற்றோர் கண்காணிக்க வேண்டும். பள்ளி மாணவர்களின் நலனில் ஆசிரியர்களைப் போல, பெற்றோரின் கவனமும் அத்தியாவசியமானதாகும். எனவே, போதைக்கலாச்சாரத்தில் இருந்து தங்களது குழந்தைகளைப் பாதுகாப்பது பெற்றோரின் கடமை" என்று கூறியுள்ளனர்.

கொழும்புவில் இரண்டு பள்ளிகளைச் சேர்ந்த 14, 16 வயதுடைய மாணவிகள், தங்களால் ஐஸ் போதைப்பொருள் இல்லாமல் வாழ முடியாது என்று வாக்குமூலம் அளித்துள்ளது காவல் துறையினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. "போதைப் பொருளைப் பயன்படுத்துவதால் எதுவுமே ஞாபகத்திற்கு வர மறுக்கிறது. உடன் படிக்கும் மாணவர்கள் சிலர் தங்களுக்கு இந்த பழக்கத்தை ஏற்படுத்தி விட்டதால் அதனைக் கைவிட முடியாமல் தவிக்கிறோம்" என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.

ஐஸ் போதைப்பொருள் பயன்படுத்துவதால் பக்கவாதம் அல்லது மாரடைப்பு ஏற்படும் என்று மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர். ஆனாலும் இலங்கையில் ஐஸ் போதைப்பொருள் விற்பனை களைகட்டி வருவது காவல் துறையினருக்கு சவாலாக மாறியுள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in