`நான் ஓசில வரமாட்டேன்; டிக்கெட் கொடு'- அமைச்சர் பொன்முடி பேச்சால் அரசு பஸ் கண்டக்டரிடம் அடம்பிடித்த மூதாட்டி

`நான் ஓசில வரமாட்டேன்; டிக்கெட் கொடு'- அமைச்சர் பொன்முடி பேச்சால் அரசு பஸ் கண்டக்டரிடம் அடம்பிடித்த மூதாட்டி

அரசு பேருந்தில் நான் ஓசில வரமாட்டேன் என்று மூதாட்டி ஒருவர், கண்டக்டரிடம் டிக்கெட் கேட்டு அடம்பிடிக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

தமிழக சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணி அமோக வெற்றி பெற்றதையடுத்து தேர்தல் வாக்குறுதியாக பெண்களுக்கு நகரப் பேருந்துகளில் இலவச பயணம் திட்டத்தை நடைமுறைப்படுத்தியது. இதனால் அரசு போக்குவரத்துக் கழகம் ஒரு நாளைக்கு பல கோடி ரூபாய் நஷ்டத்தை கண்டு வருகிறது. இந்தத் திட்டத்தால் ஏழை, எளிய, நடுத்தர மக்கள் பயன்பெற்று வருகின்றனர். மாதம் இவர்களுக்கு 600 ரூபாய் முதல் ஆயிரம் ரூபாய் வரை செலவு மிச்சமாகிறது.

இந்நிலையில் பெண்கள் அரசு பேருந்துகளில் இலவச பயணம் மேற்கொள்வது பற்றி அமைச்சர் பொன்முடி பேசியது பெரும் சர்ச்சையாக வெடித்தது. கூட்டம் ஒன்றில் பேசிய அமைச்சர் பொன்முடி பெண்களைப் பார்த்து, “நீங்க எங்க போனாலும் ஓசி பஸ்லதானே போறீங்க?” என்று கேட்டார். பெண்களுக்கான இலவச பேருந்து பயணத் திட்டத்தை ஓசி என்று அமைச்சர் பேசியது பெண்கள் மத்தியில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இந்நிலையில், அரசுப் பேருந்தில் பயணம் மேற்கொள்ளும் மூதாட்டி ஒருவர், “நான் ஓசியில் அரசு பஸ்ஸில் வரமாட்டேன். எனக்கு டிக்கெட் கொடுங்கள்” என்று அரசு பஸ் கண்டக்டரிடம் கேட்கிறார். அவர், “டிக்கெட் தர முடியாது” என்று கூறுகிறார்.

அடம் பிடிக்கும் அந்த மூதாட்டி, “எனக்கு டிக்கெட் தரவேண்டும். நான் ஓசியில் பஸ்ஸில் செல்லமாட்டேன்” என்று கூறி அடம் பிடிக்கிறார். வேறு வழி இன்றி கண்டக்டர், அந்த மூதாட்டிக்கு டிக்கெட் கொடுக்கிறார். அதன் பின்னர் மூதாட்டி இருக்கையில் உட்கார்ந்து பயணத்தை மேற்கொள்கிறார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in