`காதலனை நான் கொல்லவில்லை; போலீஸுக்கு பயந்து அப்படி சொன்னேன்'- நீதிமன்றத்தில் காதலி திடீர் பல்டி

குமரி மாவட்டம், திற்பரப்பு பகுதிக்கு காதலி கிரீஸ்மாவை அழைத்து வந்த கேரள போலீஸார்
குமரி மாவட்டம், திற்பரப்பு பகுதிக்கு காதலி கிரீஸ்மாவை அழைத்து வந்த கேரள போலீஸார்

தன்னை உருகி, உருகி காதலித்த ஷாரோனுக்கு விஷம் கொடுத்து கொலை செய்ததாக கிரீஸ்மா என்ற காதலியை போலீஸார் கைது செய்து இருந்தனர். அவரும் தான் கொலை செய்ததை ஒப்புக்கொண்டு வாக்குமூலமும் கொடுத்திருந்தார். இந்நிலையில் நீதிமன்றத்தில் தான் போலீஸாரின் மிரட்டலுக்கு பயந்தே பொய் வாக்குமூலம் கொடுத்தேன் என கிரீஸ்மா தெரிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழக- கேரள எல்லையோரப் பகுதியில் உள்ள தமிழகத்தின் ராமவர்மன் சிறை பகுதியைச் சேர்ந்தவர் சிந்து. இவரது மகள் கிரீஸ்மா(23). இவருக்கும் கேரளத்தைச் சேர்ந்த ஷாரோன்ராஜ் என்பவருக்கும் காதல் ஏற்பட்டது. ஷாரோன்ராஜ், குமரி மாவட்டத்தில் கல்லூரியில் ரேடியாலஜி பாடப்பிரிவில் படித்தார். இருவரும் வெவ்வேறு கல்லூரிகளில் படித்தாலும் ஒரே வழித்தடத்தில் அரசுப் பேருந்து பயணத்தில் காதல் மலர்ந்தது. இந்தக் காதல் விறு, விறுவென வளர்ந்து இருவரும் சேர்ந்து அதிகமான இடங்களுக்கு ஊர் சுற்றினர். சேர்ந்தே விடுதிகளிலும் தங்கினர். இந்நிலையில் கிரீஸ்மாவுக்கும், ராணுவ வீரர் ஒருவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. ஆனால் கிரீஸ்மாவின் ஜாதகப்படி இரண்டாவது திருமணமே தங்கும் என இருந்ததாகவும், அந்த மூடநம்பிக்கையால் ஷாரோன்ராஜை கொலை செய்ததாகவும் தகவல் கசிந்தது.

கிரீஸ்மா தன் காதலன் ஷாரோன்ராஜை பிரிய முடிவு எடுத்து அவருக்கு கசாயம் மற்றும் ஜூஸில் விஷம் கலந்து கொடுத்தார். ஜூஸ் சேலஞ்ச் என்னும் பெயரில் ஒருவிளையாட்டு போல் இந்த கொலையை அரங்கேற்றியிருந்தார் கிரீஸ்மா. இதில் படிப்படியாக உடல் உறுப்புகள் செயல் இழந்து கடந்த அக்டோபர் மாதம் 25-ம் தேதி ஷாரோன்ராஜ் உயிரிழந்தார். இதில் ஷாரான் ராஜின் தந்தை ஜெயராஜ் கொடுத்த புகாரின்பேரில் முதலில் கிரீஸ்மா கைது செய்யப்பட்டார். இவ்வழக்கில் ஆவணங்களை அழித்த கிரீஸ்மாவின் தாய் சிந்து, மாமா நிர்மல் குமார் ஆகியோர் தொடர்ந்து கைது செய்யப்பட்டனர். கிரீஸ்மாவை குமரி மாவட்டத்தில் அவரும் ஷாரோன் ராஜூம் சேர்ந்து சுற்றிய பகுதிகளுக்கு அழைத்து வந்தும் கேரள போலீஸார் விசாரணை மேற்கொண்டனர்.

இந்நிலையில் வழக்கு விசாரணை நடந்துவரும் திருவனந்தபுரம் மாஜிஸ்திரேட் கோர்ட்டில், காதலன் ஷாரோன்ராஜிற்கு தான் விஷம் கலந்து கொடுக்கவில்லை எனவும், போலீஸாரின் மிரட்டலுக்குப் பயந்தே அப்படி சொன்னேன் எனவும் கிரீஸ்மா வாக்குமூலம் கொடுத்துள்ளார். அதேநேரம் இவ்வழக்கின் விசாரணை அதிகாரிகள், கிரீஸ்மாவை காவல் துறையில் இருந்து யாரும் மிரட்டவோ, அழுத்தம் தரவோ இல்லை. அவரது வாக்குமூலம் முழுவதும் வீடியோ பதிவு செய்யப்பட்டது. அவரை மீண்டும் காவலில் எடுத்து விசாரிப்போம். ஒருவேளை மாஜிஸ்திரேட் நீதிமன்றம் அனுமதிக்காவிட்டால் எர்ணாக்குளம் உயர்நீதிமன்றத்தில் சென்று முறையிடுவோம். இருமாதங்களில் இவ்வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும்” என்று தெரிவித்துள்ளனர். கிரீஸ்மாவின் இந்த திடீர் குற்றச்சாட்டு கேரளத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in