என்னால் சரளமாக பேச முடிகிறது: ஜீவசமாதி சந்தேகத்திற்கு நித்யானந்தா பதில்

என்னால் சரளமாக பேச முடிகிறது: ஜீவசமாதி சந்தேகத்திற்கு நித்யானந்தா  பதில்

தன்னால் சரளமாக பேச முடிகிறது என்றும், விரைவில் சத்சங்கங்களையும், ஆன்மிக வகுப்புகளையும் மேற்கொள்வேன் என நித்யானந்தா கூறியுள்ளார்.

திருவண்ணாமலையைச் சேர்ந்த நித்யானந்தா பெங்களூரு அருகே பிடதியில் ஆசிரமம் நடத்தி வந்தார். இவர் மீது பாலியல் பலாத்காரம் உள்ளிட்ட பல்வேறு புகார்கள் உள்ளன. இந்த நிலையில் கைலாசா என்ற நாட்டை உருவாக்கி அங்கு குடியேறி விட்டதாக இணையதளத்தில் அறிவித்தார். அத்துடன் சமூக வலைதளம் மூலம் பக்தர்களுடன் உரையாடி வருகிறார்.

இந்நிலையில் நித்யானந்தா இறந்துவிட்டதாக சமூக ஊடகங்களில் செய்தி பரவியது. இதற்கு நித்யானந்தா தரப்பில் இருந்து மறுப்பு தெரிவிக்கப்பட்டது. அத்துடன் கைலாசாவின் அதிகாரப்பூர்வ இணைய பக்கத்தில், ஆழ்ந்த சமாதி நிலையில் இருந்து விரைவில் உடலில் குடியேறி சத்சங்க உரையாற்றுவேன் என நித்யானந்தா கூறியிருந்தார்.

இச்சூழலில் கைலாசாவின் அதிகாரப்பூர்வ முகநூல் பக்கத்தில் நித்யானந்தாவை போன்ற தோற்றத்தில் உள்ள சிலைகளுக்கு அபிஷேகம் மற்றும் ஆராதனை நடத்தும் புகைப்படங்கள் பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தன. உயிரோடு இருப்பவருக்கு ஏன் வழிபாடு நடத்தப்படுகிறது என்றும், நித்யானந்தா ஜீவசமாதி அடைந்து விட்டாரா என்ற கேள்விகளும் எழுந்தன. இதற்கு நித்யானந்தா பக்தர்கள் தரப்பில் மறுப்பு தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், நித்யானந்தா இன்று முகநூலில் ஒரு பதிவை வெளியிட்டிருந்தார். அதில் " கைலாசாவாசிகளே, சமாதி நிலை 5 வகைப்படும். அவற்றில் முதல் நிலை சுசுப்தி. இது ஆழ்ந்து தூங்கும் நிலை. இரண்டாவது ஸ்வப்னா. இது கனவு நிலை, மூன்றாவது ஜெக்ரத் எனும் விழித்திருக்கும் நிலை. நான்காவது துரியா என்ற சுயநினைவு நிலையில் மகா கைலாசத்தை உணருதல் நிலை. ஐந்தாவது துரியாதிதா என்ற உயிருடன் இருக்கும் நிலை. நான் தொடர்ந்து துரியாதிதா நிலையில் இருந்து வருகிறேன்.

உங்களது பிரார்த்தனைகள் கைகூடியுள்ளது. தினந்தோறும் நித்ய சிவ பூஜையின் போது நான் ஜக்ரத் நிலை அதாவது விழித்திருக்கும் நிலையில் இருப்பேன். மேற்கண்ட 5 நிலைகளும் எனக்கு அவ்வப்போது ஏற்படுகின்றன. இதைத்தான் சகஜ சமாதி என்பார்கள். உங்களுக்கு ஒரு நற்செய்தி, என்னால் சரளமாக பேச முடிகிறது.

நான் சமாதி நிலையில் இருந்த போது நடந்த அனைத்து சம்பவங்களும் என்னைச் சுற்றியிருந்தவர்களால் பதிவு செய்யப்பட்டன. சகஜ சமாதிக்கு வந்துவிட்டால் இனி நான் வழக்கமாக சத்சங்கங்களை நடத்துவேன். ஆன்மிக வகுப்புகளையும் மேற்கொள்வேன். அனைவருக்கும் நன்றி" என நித்யானந்தா தெரிவித்துள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in