‘பிரதமராக வேண்டும் என்பதற்காக நான் இங்கு வரவில்லை’ - அசத்தல் பதில் அளித்த அர்விந்த் கேஜ்ரிவால்!

‘பிரதமராக வேண்டும் என்பதற்காக நான் இங்கு வரவில்லை’ - அசத்தல் பதில் அளித்த அர்விந்த் கேஜ்ரிவால்!

இரண்டு நாள் பயணமாக குஜராத் சென்றிருக்கும் டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால், செய்தியாளர் சந்திப்பின்போது கேட்கப்பட்ட கேள்விக்கு, “நான் பிரதமராக வேண்டும் என்பதற்காக இங்கு வரவில்லை” என்று பதிலளித்தார்.

டெல்லியைத் தாண்டி பஞ்சாபிலும் ஆட்சியைப் பிடித்துவிட்ட ஆம் ஆத்மி கட்சி, அடுத்ததாக குஜராத்துக்கும் குறிவைத்திருக்கிறது. அர்விந்த் கேஜ்ரிவால் உட்பட அக்கட்சியின் தலைவர்கள் பல முறை குஜராத்துக்குச் சென்று வந்திருக்கின்றனர். கல்வி, சுகாதாரம் போன்ற துறைகளில் டெல்லியில் செயல்படுத்தப்பட்ட திட்டங்களை முன்வைத்து குஜராத்தில் ஆதரவு திரட்டிவருகின்றனர். அர்விந்த் கேஜ்ரிவால் ஒரு மாத கால இடைவெளிக்குள் ஐந்தாவது முறையாக, இன்று காலை குஜராத் சென்றிருக்கிறார்.

அவருடன் டெல்லி துணை முதல்வரும், கலால் கொள்கை முறைகேடு புகார்களின் அடிப்படையில் சிபிஐ சோதனைக்குள்ளாகியிருக்கும் மணீஷ் சிசோடியாவும் இந்த இரண்டு நாள் பயணத்தில் அர்விந்த் கேஜ்ரிவாலுடன் சென்றிருக்கிறார்.

இன்று காலை அகமதாபாத் செல்லும் இருவரும், ஹிம்மத்நகரில் நடைபெறும் நகர்மன்றக் கூட்டத்தில் பங்கேற்றனர். நாளை பாவ்நகரில் நடைபெறும் நகர்மன்றக் கூட்டத்திலும் பங்கேற்கவிருக்கின்றனர். இந்நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய அர்விந்த் கேஜ்ரிவால், மணீஷ் சிசோடியா மீதான நடவடிக்கைகளுக்குக் கண்டனம் தெரிவித்தார்.

“இன்னும் மூன்று அல்லது நான்கு நாட்களில் மணீஷ் சிசோடியா கைதுசெய்யப்படுவார் என்று கேள்விப்பட்டேன். யாருக்குத் தெரியும்? நான் கூட கைதுசெய்யப்படலாம். இவை எல்லாமே குஜராத் தேர்தலுக்காகவே நடத்தப்படுகின்றன” என்றார்.

மேலும், “டெல்லி பள்ளிகளின் தரத்தை உயர்த்தியதற்காக மணீஷ் சிசோடியாவுக்கு பாரத ரத்னா விருதே கொடுக்கலாம். ‘தி நியூயார்க் டைம்ஸ்’ நாளிதழ் டெல்லி கல்வி மாடலைப் புகழ்ந்திருக்கிறது. ஆனால், அரசியல் காரணங்களுக்காக மத்திய அரசால் அவர் வேட்டையாடப்படுகிறார்” என்றும் அவர் குறிப்பிட்டார்.

‘பிரதமராக விரும்புகிறீர்களா?’ என்று கேட்கப்பட்ட கேள்விக்குப் பதிலளித்த கேஜ்ரிவால், “நாங்கள் அதுபோன்ற பதவிகளுக்காக இங்கு வரவில்லை. இந்தியாவை நம்பர் 1 நாடாக மாற்ற நான் விரும்புகிறேன். அவ்வளவுதான்” என்றார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in