
மது அருந்துவிட்டுத் தினமும் கணவர் தகராறு செய்ததால் அதைத் தாங்கிக்கொள்ள முடியாமல் மனைவி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம், பேயன்குழி அம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் அருள்சாமி(38) கூலித் தொழிலாளி. இவரது மனைவி சாந்தி(35). இவர்களுக்குத் திருமணம் முடிந்து 15 ஆண்டுகள் ஆகிறது. இந்தநிலையில் சாந்தி சில தினங்களுக்கு முன்பு வீட்டில் யாரும் இல்லாதபோது தீக்குளித்தார். கரும்புகை பரவுவதைப் பார்த்து அக்கம், பக்கத்தினர் வீடு புகுந்து அவரை மீட்டனர். உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த சாந்தி ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவந்தார். அங்கு சிகிச்சைப் பலனின்றி இன்று சாந்தி பரிதாபமாக உயிர் இழந்தார்.
இந்தநிலையில் சாந்தியின் தாயார் ராமலெட்சுமி, தன் மகளின் தற்கொலைக்கு அவரது கணவர் அருள்சாமியே காரணம் எனப் புகார் கொடுத்தார். இதுகுறித்து போலீஸார் நடத்திய விசாரணையில், அருள்சாமிக்கு தீராத குடிப்பழக்கம் இருந்து வந்தது. இதனால் அடிக்கடி குடித்துவிட்டு வந்து தகராறு செய்துள்ளார். இதனால் பெருந்தொந்தரவை சாந்தி அனுபவித்துள்ளார். ஒருகட்டத்தில் இதைத் தாங்கிக்கொள்ள முடியாமல் தற்கொலை செய்துள்ளார் என்பது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து அருள்சாமியிடம் போலீஸார் விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.