திருமணமான முதலே நடத்தையில் சந்தேகம்: மனைவி, தூங்கிக்கொண்டிருந்த மகளின் கழுத்தை அறுத்த கணவன்!

திருமணமான முதலே நடத்தையில் சந்தேகம்: மனைவி, தூங்கிக்கொண்டிருந்த மகளின் கழுத்தை அறுத்த கணவன்!

மனைவி நடத்தையில் சந்தேகம், குடும்ப பிரச்சினை காரணமாக குடிபோதையில் மனைவி மற்றும் மகளின் கழுத்தை அறுத்த கணவனை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

சென்னை எம்.ஜி.ஆர்.நகர், விபி அகிலன் தெரு பகுதியில் வசித்து வருபவர் சுப்பிரமணி (46). இவரது மனைவி திலகவதி (35) வள்ளுவர் கோட்டம் பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் தட்டச்சராக பணியாற்றி வருகிறார். திருமணமாகி 14 ஆண்டுகள் ஆன நிலையில் இவர்களுக்கு 12 வயதில் 7-ம் வகுப்பு படித்து வரும் மகள் உள்ளார். திருமணமானது முதலே சுப்பிரமணி தனது மனைவி திலகவதி மீது சந்தேகப்பட்டு தினசரி குடித்துவிட்டு வந்து பிரச்சினை செய்வதை வாடிக்கையாக கொண்டிருந்தார்.

இந்நிலையில் நேற்று காலை சுப்பிரமணி சமையலுக்கு பயன்படுத்தும் சிறிய வகை கத்தியை வைத்து மனைவி திலகவதியிடம் தன்னை கழுத்தை அறுக்குமாறு கூறியுள்ளார். அப்போது திலகவதி அவரை கண்டுகொள்ளாமல் கடந்து சென்றதால் ஆத்திரமடைந்த சுப்பிரமணி, அந்த கத்தியை வைத்து திலகவதி கழுத்தையும், உறங்கிக்கொண்டிருந்த 12 வயது மகளின் கழுத்தையும் அறுத்துவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார். பின்னர் அவர்களது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து இருவரையும் 108 ஆம்புலன்ஸ் மூலம் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த நிலையில், திலகவதி கழுத்தில் 8 தையல்களும், அவரது 12 வயது மகளுக்கு 4 தையல்களும் போடப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இது குறித்து தகவலறிந்து மருத்துவமனைக்கு வந்த எம்.ஜி.ஆர் நகர் போலீஸார் திலகவதியிடம் புகாரைப் பெற்று தப்பியோடிய சுப்பிரமணியை தேடி வந்தனர். இதற்கிடையே தப்பியோடிய சுப்பிரமணி அசோக் பில்லர் மெட்ரோ மேம்பாலம் மீது ஏறி கழுத்தில் லேசாக கத்தியால் வெட்டிக்கொண்டு தற்கொலை மிரட்டல் விடுத்தபோது அசோக் நகர் தீயணைப்புத் துறையினர் மீட்டு எம்.ஜி.ஆர் நகர் போலீஸாரிடம் ஒப்படைத்தனர். பின்னர் சுப்பிரமணியனை கே.கே நகர் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று முதலுதவி சிகிச்சை அளித்த போலீஸார் அவரிடம் விசாரணை நடத்தி பின்னர் சிறையில் அடைத்தனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in