வெளிநாட்டில் இருந்து கணவர் சொந்த ஊருக்குத் திரும்பிய நிலையில், அவரது மனைவி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
குமரிமாவட்டம், அம்பலபதி பகுதியைச் சேர்ந்தவர் பிரகாஷ். இவர் வெளிநாட்டில் தங்கி மீன்பிடித் தொழில் செய்து வருகிறார். இவரது மனைவி மேரி சுருதி(26). இந்தத் தம்பதிக்கு திருமணமாகி இரண்டரை ஆண்டுகளாகிறது. வெளிநாட்டில் இருந்தாலும் வாட்ஸ் அப் வழியாக போன் பேசும்போது தம்பதிகளுக்குள் அடிக்கடி வாக்குவாதம் ஏற்படும் எனக் கூறப்படுகிறது.
இந்நிலையில் கடந்த 5-ம் தேதி வெளிநாட்டில் இருந்து சொந்த ஊரான அம்பலபதிக்கு பிரகாஷ் வந்தார். இந்நிலையில் நேற்று இரவு வழக்கம்போல் தம்பதிக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. இந்நிலையில் மேரி சுருதி வீட்டில் ஒரு அறைக்குள் போய் தூக்குப்போட்டுத் தற்கொலை செய்துகொண்டார்.
கன்னியாகுமரி போலீஸார் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து, மேரி சுருதி உடலைக் கைப்பற்றி ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இவர்களுக்குத் திருமணம் முடிந்து இரண்டரை ஆண்டுகளே ஆனதால் நாகர்கோவில் கோட்டாச்சியரும் விசாரணை மேற்கொண்டு வருகிறார். கணவர் வெளிநாட்டில் இருந்து வீடு திரும்பிய நிலையில் மனைவி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.