கோடாலியால் மனைவியை இரண்டு துண்டுகளாக்கி காட்டில் வீசிய கணவன்: மத்தியப்பிரதேசத்தில் பயங்கரம்

கோடாலியால் மனைவியை இரண்டு துண்டுகளாக்கி காட்டில் வீசிய கணவன்: மத்தியப்பிரதேசத்தில் பயங்கரம்

மத்தியப்பிரதேசத்தில் மனைவியைக் கொலை செய்து இரண்டு துண்டுகளாக்கி காட்டில் வீசிய கணவனை போலீஸார் கைது செய்துள்ளனர்.

மத்தியப்பிரதேச மாநிலம் ஷாதோல் பகுதியைச் சேர்ந்த சரஸ்வதி என்ற பெண் காணாமல் போனதாக அவரது தம்பி நவ.13-ம் தேதி காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். இந்த நிலையில் ஷாதோல் பகுதியில் உள்ள காட்டுப்பகுதியில் ஒரு பெண் உடல் நிர்வாண நிலையில் கிடப்பதாக போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது.

இதையடுத்து போலீஸார், மோப்பநாய் உதவியுடன் அந்த காட்டுப் பகுதியில் தேடுதல் வேட்டையை நடத்திய போது ஒரு பெண்ணின் தலை மற்றும் உடல் பகுதிகள் கண்டெடுக்கப்பட்டது. இதுகுறித்து போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்த போது காணாமல் போன சரஸ்வதி தான் காட்டில் கொலை செய்யப்பட்டுக் கிடந்தது என்று தெரிய வந்தது.

இதையடுத்து அவரது கணவர் ராம் கிஷோர் படேலிடம் போலீஸார் விசாரணை நடத்தினர். அவர் முன்னுக்குப் பின் முரணாக பேசியதால் போலீஸாருக்குச் சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து அவரிடம் போலீஸ் முறையில் விசாரித்த போது தனது மனைவி சரஸ்வதியை கோடாலியால் இரண்டு துண்டுகளாக வெட்டி காட்டில் வீசியதாக ராம் கிஷோர் படேல் கூறினார்.

இதுகுறித்து போலீஸார் கூறுகையில்," கணவன், மனைவியான ராம் கிஷோர் படேலுக்கும், சரஸ்வதிக்கும் குடும்பச்சண்டை அடிக்கடி ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக சில நாட்களாக இருவருக்கும் பேச்சுவார்த்தை இல்லாமல் இருந்துள்ளது. இந்த ஆத்திரத்தில் தான் தன் மனைவியை ராம் கிஷோர் படேல் கோடாலியால் வெட்டிக்கொலை செய்துள்ளார். அவரைக் கைது செய்துள்ளோம். இந்த கொலையின் பின்னணியில் வேறு யாரும் இருக்கிறார்களா என்று தொடர்ந்து விசாரித்து வருகிறோம்" என்றனர்.

டெல்லியில் 35 துண்டுகளாக இளம்பெண் வெட்டிக்கொலை, உத்தரப்பிரதேசத்தில் காதலியை 6 துண்டுகளாக்கி கொலை என்ற கொடூர சம்பங்களின் தொடர்ச்சியாக மத்திய பிரதேசத்தில் தனது மனைவியை இரண்டு துண்டுகளாக்கி கணவன் கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in