உயிருக்குப் போராடிய காதல் மனைவி; கண்முன்பே உயிரை மாய்த்த கணவர்: அரிவாளால் வெட்டியதால் நடந்த துயரம்

மருத்துவனையில் ஜெரினாபீவி
மருத்துவனையில் ஜெரினாபீவி

மயிலாடுதுறை அருகே குடும்பத் தகராறு காரணமாக மனைவியை அரிவாளால் வெட்டிய கணவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி அருகே கீழப்பெரம்பூரைச் சேர்ந்தவர் தம்புசாமி மகன் அறிவழகன்(62). அறிவழகனுக்கு முப்பது வருடங்களுக்கு முன்பு திருமணம் ஆனநிலையில் கருத்து வேற்றுமை காரணமாக மனைவி மற்றும் குழந்தைகளை பிரிந்து வாழ்ந்து வந்தார். இந்நிலையில் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு பிரேமா என்கிற ஜெரினா பீவி (45) என்பவரை அறிவழகன் இரண்டாவதாக காதல் திருமணம் செய்துள்ளார்.

கடந்த 20 ஆண்டுகளுக்கு மேல் வெளிநாட்டில் பணியாற்றிய இவர் கடந்த ஒரு ஆண்டாக வெளிநாட்டுக்கு செல்லாமல் ஊரிலேயே தங்கிவிட்டார். இத்தம்பதிக்கு குழந்தைகள் இல்லை. இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் இன்று காலை நீண்ட நேரம் ஆகியும் வீட்டின் கதவு திறக்கப்படாததால் சந்தேகமடைந்த உறவினர்கள் கதவை உடைத்து வீட்டின் உள்ளே சென்று பார்த்துள்ளனர்.

அப்போது ஜெரினாபீவி வெட்டு காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடியதையும், அறிவழகன் தூக்கில் தொங்கியபடி இறந்து கிடப்பதையும் கண்டு அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதனையடுத்து அவர்கள் அளித்த தகவல்களின் பேரில் பெரம்பூர் காவல் நிலைய போலீஸார் சம்பவ இடத்திற்கு வந்து ஜெரினா பீவியை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் தஞ்சாவூர் தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அறிவழகனின் உடலை கைப்பற்றி உடற்கூராய்வுக்காக மயிலாடுதுறை அரசு பெரியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து பெரம்பூர் காவல்நிலையத்தில் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். காவல் துறையினரின் முதல்கட்ட விசாரணையில் கணவன், மனைவி இடையே ஏற்பட்ட தகராறினால் ஆத்திரமடைந்த அறிவழகன் அரிவாளால் மனைவியை வெட்டியுள்ளார். இதில் ஜெரினா பீவி படுகாயம் அடைந்து உயிருக்கு போராடியதைக் கண்டு மனமுடைந்த அறிவழகன், ஜெரினாபீவியின் கண்ணின் முன்னே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார் என்பது தெரியவந்தது.

மனைவியை கோபத்தில் அரிவாளால் வெட்டிய கணவன், அவர் உயிருக்கு போராடியதைக்கண்டு மனம் நொந்து தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in