கோபித்துச் சென்ற மனைவி; தனிமையில் தவித்த கணவன்: நேரில் அழைத்தும் வராததால் எடுத்த விபரீத முடிவு

கோபித்துச் சென்ற மனைவி; தனிமையில் தவித்த கணவன்: நேரில் அழைத்தும் வராததால் எடுத்த விபரீத முடிவு

நெல்லை மாவட்டம், பாவூர்சத்திரத்தில் மனைவி பிரிந்து சென்ற துயரத்தில் கணவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருநெல்வேலி மாவட்டம், பாவூர்சத்திரம் செங்குந்தர் விநாயகர் கோயிலை சேர்ந்தவர் ஜெகன்னாதன்(35) மொத்தமாக துணிகளை விலைக்கு வாங்கி ஜவுளி வியாபாரம் செய்துவந்த இவருக்கு மனைவி மற்றும் இருகுழந்தைகள் உள்ளனர். கடந்த சில தினங்களுக்கு முன்பு ஜெகன்னாதனுக்கும், அவரது மனைவிக்கும் இடையே சண்டை ஏற்பட்டது. இதனால் கோபித்துக்கொண்டு அவரது மனைவி தன் தாய் வீட்டிற்குச் சென்றுவிட்டார். இதனைத் தொடர்ந்து ஜெகன்னாதன் கடந்த சிலதினங்களாகவே மனைவியை பிரிந்த துயரத்திலேயே இருந்துவந்தார்.

நேற்று நேரில் போய் அழைத்தும் அவர் மனைவி சேர்ந்து வாழ வரவில்லை. இதனால் ஏற்பட்ட மன உளைச்சலில் ஜெகன்னாதன் வீட்டில் யாரும் இல்லாதபோது தூக்குப்போட்டுத் தற்கொலை செய்து கொண்டார். பாவூர் சத்திரம் போலீஸார் ஜெகன்னாதனின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். அப்போது அவரது சட்டைப் பாக்கெட்டில் மனைவியை பிரிந்தது தொடர்பாக உருக்கமான ஒரு கடிதமும் இருந்தது. கூடவே அந்தக் கடிதத்தில் தன் தற்கொலைக்கு காரணமானவர்கள் யார் என்பது குறித்தும் ஜெகன்னாதன் எழுதியுள்ளார். இதுகுறித்து பாவூர் சத்திரம் போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in