ஒருபக்கம் விவாகரத்து வழக்கு; மறுபக்கம் ஒரே வீட்டில் குடித்தனம்: காதல் மனைவியை கொன்ற கணவன்

ஒருபக்கம் விவாகரத்து வழக்கு; மறுபக்கம் ஒரே வீட்டில் குடித்தனம்: காதல் மனைவியை கொன்ற கணவன்

நீதிமன்றத்தில் விவாகரத்து வழக்கு நடந்துவரும் நிலையில் நாகர்கோவிலில் தம்பதிகள் சேர்ந்தே வாழ்ந்து வந்தனர். இந்நிலையில் கருத்துமோதலில் மனைவியைக் கணவர் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நாகர்கோவில் பரமார்த்தலிங்கபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ஆண்டனி பெனிஸ்டர்(30). பெயின்டராக உள்ளார். இவரது மனைவி பத்மா(30). இவர்கள் இருவருமே காதலித்து திருமணம் செய்து கொண்டவர்கள். இந்தத் தம்பதிக்கு இருகுழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் நேற்று மாலை பத்மா மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இதுகுறித்து வடசேரி போலீஸார் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டனர். பத்மாவின் உடல் பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டதில் அவர் கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டது தெரியவந்தது.

இந்நிலையில் பத்மாவை தான் கொலை செய்ததாக அவரது கணவர் ஆண்டனி பெனிஸ்டர் வடசேரி காவல் நிலையத்தில் சரணடைந்தார். அவர் போலீஸாருக்குக் கொடுத்த வாக்குமூலத்தில், “காதலித்துத் திருமணம் செய்துகொண்டாலும் எங்களுக்குள் அடிக்கடி சண்டை வரும். இதனால் முறைப்படி பிரிந்துவிட முடிவுசெய்தோம். இதுதொடர்பாக நாகர்கோவில் நீதிமன்றத்தில் விவாகரத்து வழக்கும் நடக்கிறது. வழக்கு முடியும்வரையில் ஒரேவீட்டில் சேர்ந்து இருப்போம் என முடிவு செய்து இருந்தோம்.

எனக்கு என் மனைவி பத்மாவின் நடத்தையில் சந்தேகம் உண்டு. அதுதான் நாங்கள் விவாகரத்துவரை செல்லவும் காரணம். நேற்றும் வீட்டில் இருந்து பத்மா செல்போனில் பேசிக்கொண்டே இருந்தார். நான் யாரிடம் பேசுகிறாய் எனக் கேட்டதும், நமக்குத்தான் விவாகரத்து ஆகப் போகிறது அல்லவா? நான் யாரிடம் பேசினால் உனக்குஎன்ன? எனக் கேட்டார். இதில் கோபப்பட்டு அவர் கழுத்தை நெரித்தேன். அவர் இறந்துவிட்டார்” என்றார். இதைத் தொடர்ந்து பெயின்டர் ஆண்டனி பெனிஸ்டரை போலீஸார் கைது செய்தனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in