செல்போனை எடுக்காத பெற்றோர்; பதறிய வெளியூரில் இருந்த மகள்: பக்கத்து வீட்டுக்காரர்கள் பார்த்தபோது அதிர்ச்சி

ராமகிருஷ்ணன் - ஶ்ரீலஷ்மி தம்பதி
ராமகிருஷ்ணன் - ஶ்ரீலஷ்மி தம்பதி

கரூரில் வயதான கணவன், மனைவி இருவரும் ஒரே நேரத்தில் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் அவர்கள் வயது முதிர்வு காரணமாக உயிரிழந்தார்களா? அல்லது தற்கொலையா என போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கரூர் ஜவகர் கடைவீதி பகுதியில் வசித்து வந்தவர் ராமகிருஷ்ணன் (வயது 75). இவர் கரூர் வைசியா வங்கியில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவரது மனைவி ஸ்ரீ லக்ஷ்மி (வயது 70). இவர்களுக்கு திருமணமாகி 45 ஆண்டுகள் ஆகிறது. இவர்களுக்கு இரண்டு பெண்கள் உள்ளனர். இருவருக்கும் திருமணமாகி குடும்பத்துடன் வெளியூரில் வசித்து வருகின்றனர்.

ஸ்ரீலக்ஷ்மி கடந்த 6 ஆண்டுகளுக்கும் மேலாக உடல் நலக்குறைவு ஏற்பட்டு வீட்டில் படுத்த படுக்கையில் இருந்து வந்தார். உடல் நலம் பாதிக்கப்பட்ட மனைவியை கணவர் ராமகிருஷ்ணன் தான் கவனித்து வந்துள்ளார். மனைவிக்கு தேவையான அனைத்து பணிவிடைகளையும் அவர்தான் செய்து வந்தார். வெளியூரில் வசிக்கும் அவர்களது மகள்கள் தினமும் இரவில் அவர்களிடம் அலைபேசியில் பேசுவது வழக்கம். அதன்படி நேற்று இரவு பேசியிருக்கிறார்கள்.

இன்று காலை மீண்டும் பெற்றோரிடம் பேச அவர்கள் முயற்சித்தபோது இருவரும் அலைபேசியை எடுக்கவில்லை. மீண்டும் மீண்டும் முயற்சித்து பார்த்துவிட்டு பக்கத்து வீட்டுக்காரர்களுக்கு அலைபேசி மூலம் தகவல் கொடுத்துள்ளனர். அவர்கள் சென்று பார்த்தபோது வீட்டின் கதவு உள்பக்கமாக பூட்டப்பட்டிருந்தது. இதனையடுத்து கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது கணவன் சமையல் அறையிலும், மனைவி படுக்கையிலும் இறந்து கிடந்துள்ளனர். உடனடியாக அவர்களது மகள்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் போலீஸாருக்கு கொடுத்த தகவலின் அடிப்படையில் அங்கு வந்த போலீஸார் அவர்களது உடல்களை பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது தொடர்பாக கரூர் மாநகர போலீஸார் மேற்கொண்ட விசாரணையில் வயது முதிர்வு காரணமாக உயிரிழந்து இருக்கலாம் என தெரிய வந்துள்ளது. இருந்தபோதிலும், இருவரும் ஒரே நேரத்தில் உயிரிழந்துள்ளதால் தற்கொலை செய்து கொண்டிருக்கலாமா என்கின்ற கோணத்திலும் விசாரித்து வருகின்றனர்.

ஒரே நேரத்தில் கணவன், மனைவி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in