ஓய்வு பெற்ற பல்கலைக்கழக டீன், பேராசிரியை குத்திக்கொலை: பிஹாரில் பயங்கரம்

கொலை செய்யப்பட்ட மகேந்திரசிங், அவரது மனைவி புஷ்பா சிங்.
கொலை செய்யப்பட்ட மகேந்திரசிங், அவரது மனைவி புஷ்பா சிங்.ஓய்வு பெற்ற பல்கலைக்கழக டீன், பேராசிரியை குத்திக்கொலை: பிஹாரில் பயங்கரம்

பிஹாரில் ஓய்வு பெற்ற பல்கலைக்கழக டீனும், ஓய்வு பெற்ற பேராசிரியையான அவரது மனைவியும் கத்தியால் குத்திக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பிஹார் மாநிலம் ஆராவிற்குட்பட்ட கதிரா பகுதியைச் சேர்ந்தவர் மகேந்திரசிங்(70). இவர் வீர்குன்வர் சிங் பல்கலைக்கழகத்தின் முன்னாள் டீனாவார். இவரது மனைவி புஷ்பா சிங்(65). இவர் மகளிர் கல்லூரி ஒன்றில், உளவியல் பேராசிரியையாக பணியாற்றி ஓய்வு பெற்றவர். வயதான இந்த தம்பதிகள் இருவரும் தனியாக வசித்து வந்தனர். இந்த நிலையில், மகேந்திரசிங்கின் இளைய சகோதரர் ஹிரா சிங், தனது சகோதரரை தொலைபேசியில் தொடர்பு கொண்டுள்ளார். ஆனால், அவரது அழைப்புக்கு பதில் கிடைக்கவில்லை. இதனால் அவர் கதிராவில் உள்ள மகேந்திரசிங் வீட்டிற்குச் சென்றார்.

அங்கு வீட்டினுள் மகேந்திரசிங்கும், அவரது மனைவி புஷ்பா சிங்கும் கத்தியால் குத்திக்கொலை செய்யப்பட்டுக் கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். இதையடுத்து அவர் நவாடா காவல் நிலையத்திற்குத் தகவல் தெரிவித்தார். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீஸார், கொலை செய்யப்பட்ட இருவரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவ இடத்தில் எஸ்.பி பிரமோத் குமார் யாதவ், ஏஎஸ்பி ஹிமான்ஷு ஆகியோர் விசாரணை நடத்தினர்.

இக்கொலை சம்பவம் குறித்து ஹிரா சிங் கூறுகையில்," கடந்த 26-ம் தேதி அன்று எனது சகோதரர் மகேந்திரசிங்கை பார்த்தேன். நேற்று அவருடன் தொலைபேசியில் பேசுவதற்காக தொடர்பு கொண்டேன். ஆனால், எனது அழைப்புக்குப் பதில் அளிக்கப்படவில்லை. இதனால், அவரது வீட்டிற்குச் சென்றேன். அப்போது எனது சகோதரரும், அவரது மனைவியும் வீட்டிற்குள் குத்திக்கொலை செய்யப்பட்டுக் கிடந்தனர்" என்றார்.

இந்த இரட்டைக்கொலை குறித்து போலீஸார் கூறுகையில், " பிஹாரில் உள்ள ரோஹ்தாஸ் மாவட்டத்தைச் சேர்ந்த தம்பதியர், ஓய்வு பெற்ற பிறகு ஆராவிற்கு குடிபெயர்ந்துள்ளனர். இந்த இரட்டைக்கொலை சொத்திற்காக நடந்ததா என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறோம்" என்றனர். வயதான தம்பதியர் குத்திக்கொலை செய்யப்பட்ட சம்பவம் ஆரா பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in