
குழந்தை இல்லாத விரக்தியில் கணவன், மனைவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை புளியந்தோப்பு சாஸ்திரி நகர் 6-வது தெருவை சேர்ந்தவர் சக்திவேல்(45). இவரது மனைவி துலுக்கானம்(35). கணவன், மனைவி இருவரும் சென்னை மாநகராட்சி 128 வார்ட்டில் (மாங்காடு) ஒப்பந்த அடிப்படையில் துப்புரவு தொழிலாளர்களாக வேலை பார்த்து வந்தனர். சக்திவேல்- துலுக்கானம் தம்பதிக்கு திருமணமாகி 13 ஆண்டுகள் ஆன நிலையில் இதுவரை குழந்தை பாக்கியம் இல்லை. இதனால் கணவன், மனைவி இடையே அவ்வபோது தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த 25-ம் தேதி இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இதனை தொடர்ந்து கடந்த 3 நாட்களாக கணவன், மனைவி இருவரும் வீட்டில் இருந்து வெளியே வராததால் சந்தேகமடைந்த அக்கம்பக்கத்தினர் இன்று காலை புளியந்தோப்பு காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்ததன் பேரில் போலீஸார் சம்பவயிடத்திற்கு சென்று பார்த்தபோது வீட்டு உட்புறமாக தாழ்பாள் போட்டு இருந்ததால் கதவை உடைத்து உள்ளே சென்றனர். அங்கு கட்டிலில் துலுக்கானம் இறந்த நிலையிலும், சக்திவேல் தூக்கில் தொங்கியபடி உயிரிழந்து இருந்ததை பார்த்து இருவரது உடலை மீட்டு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து புளியந்தோப்பு போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் குழந்தை இல்லாத விரக்தியில் கணவன்- மனைவி தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. மேலும் சக்திவேல் மனைவி துலுக்கானத்தை கொலை செய்துவிட்டு தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது துலுக்கானம் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டாரா? என்பது பிரேத பரிசோதனைக்கு பின்னரே தெரியவரும் என போலீஸார் தெரிவித்துள்ளனர்.
குழந்தையின்மையால் கணவன்- மனைவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.