போலி நகையை கொடுத்துவிட்டு ஒரிஜினல் நகையுடன் எஸ்கேப்: கணவன், மனைவியை சிக்க வைத்த சிசிடிசி கேமரா

கைதான ஊர்க்காவல் படை காவலர் மோகன்குமார்
கைதான ஊர்க்காவல் படை காவலர் மோகன்குமார்

போலி தங்க நகைகளை கொடுத்து ஒர்ஜினல் தங்க நகை வாங்கி மோசடியில் ஈடுபட்ட ஊர்க்காவல் படை காவலர் மற்றும் அவரது மனைவியை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

சென்னை மைலாப்பூர் பஜார் ரோடு பகுதியில் வசிப்பவர் ஜெயச்சந்திரன் (61). இவர் அதே பகுதியில் மகாலட்சுமி ஜூவல்லர்ஸ் என்ற பெயரில் நகைக்கடை நடத்தி வருகிறார். கடந்த மாதம் 18-ம் தேதி இவரது நகைக்கடைக்கு கணவருடன் வந்த பெண்மணி ஒருவர், தன்னை ராணி என அறிமுகம் செய்து கொண்டதுடன் தன்னிடம் பழைய தங்க நகைகள் இருப்பதாகவும், அதற்கு பதிலாக புதிய தங்க நகை வேண்டும் என கூறியுள்ளார். பின்னர் தான் கொண்டு வந்த 8.5 சவரன் பழைய நகைகளை கொடுத்து விட்டு 6 சவரன் புது நகைகளை வாங்கி கொண்டு பழைய நகைகளை ஒரு வாரத்திற்கு அப்படியே வைத்திருக்கும் படியும் ஒரு வாரத்தில் பணம் கொடுத்துவிட்டு மீட்டு கொள்வதாகவும் தெரிவித்துள்ளார்.

இதனை நம்பி நகைக்கடை உரிமையாளர் ஜெயச்சந்திரன் 6 சவரன் தங்க நகைகளை அவரிடம் கொடுத்து அனுப்பினார். ஒரு வாரத்தில் நகையை மீட்டு செல்வதாக கூறிவிட்டு சென்ற பெண் நேற்று முன்தினம் வரை வராததால் சந்தேகமடைந்த நகைக்கடை உரிமையாளர் அந்த பெண்மணி கொடுத்து சென்ற 8.5 சவரன் நகையை சோதித்து பார்த்த போது அது போலி என தெரியவந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த நகை உரிமையாளர் ஜெயச்சந்திரன் இது குறித்து மைலாப்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீஸார் வழக்கு பதிவு செய்து நகைக்கடையில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில் அந்த பெண் தனது கணவருடன் இருசக்கர வாகனத்தில் செல்வது பதிவாகி இருந்தது.

உடனே போலீஸார் இருசக்கர வாகன எண்ணை வைத்து அவரது முகவரியை கண்டு பிடித்து அவரது வீட்டிற்கு சென்று நகைகளை பறிமுதல் செய்து அவரது கணவரை காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர். விசாரணையில் மோசடியில் ஈடுபட்ட பெண் குன்றத்தூர் லட்சுமி நகரை சேர்ந்த ஈஸ்வரி(36) என்பதும், அவரது கணவர் மோகன்குமார்(46) ஊர்க்காவல் படையில் பணியாற்றி வருவதும் தெரியவந்தது. இதனையடுத்து போலீஸார் போலி தங்க நகைகளை கொடுத்து மோசடியில் ஈடுபட்ட கணவன், மனைவியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in