கார் ஹெட்லைட் வெளிச்சத்தில் தேர்வெழுதிய மாணவர்கள்!

இது பிஹார் களேபரம்
கார் விளக்கு வெளிச்சத்தில் தேர்வு
கார் விளக்கு வெளிச்சத்தில் தேர்வு

தேர்வுகளுக்கும் பிஹாருக்கும் ஏழாம் பொருத்தம் போல. பிஹாரில் நடைபெற்ற மற்றுமொரு தேர்வு சர்ச்சையை கூட்டி இருக்கிறது.

பிஹார் மாநிலம் மோதிஹரி மாவட்டத்தில் 400க்கும் மேற்பட்ட இன்டர்மீடியேட் மாணவர்கள் பங்கேற்ற தேர்வு ஒன்று, வாகனங்களின் ஹெட் லைட் வெளிச்சத்தில் நடைபெற்று இருக்கிறது. திங்களன்று நடைபெற்ற இந்த தேர்வு தொடர்பாக இன்றும்(பிப்.2) பொதுமக்கள் போராட்டம் மற்றும் அதிகாரிகளின் விசாரணை ஆகியவை தொடர்ந்து வருகின்றன.

ஒரு தலைமுறை முன்பாக பிஹாரின் தேர்தல் கலவரங்கள் பிரசித்தி பெற்றிருந்தன. வாக்குப்பதிவு நாளன்று துப்பாக்கி முனையில் வாக்குப்பெட்டியை கைப்பற்றுவது, கள்ள ஓட்டு போடுவது போன்றவை அந்த மாநிலத்தின் தனி அடையாளமாக இருந்து வந்தன. பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தியதில் தேர்தல் கலவரங்கள் குறைந்தன.

பின்னர் அதே பாணியிலான முறைகேடுகள் கல்வி நிலையங்களுக்கும் தாவின. மாநிலத்தின் பள்ளி முதல் கல்லூரி வரையிலான தேர்வுகளில், முறைகேடுகள், நூதன மோசடிகள் ஆகியவை பிரபலமாயின. கத்தி முனையில் தேர்வெழுதுவது, பகிரங்கமாய் மிரட்டி பிட் தருவது என அண்மை வருடங்களில் வீடியோக்கள் வெளியாகி, பிஹார் புகழை இந்தியாவுக்கும் வெளியேயும் பரப்பின.

பிஹார் தேர்வு மையம் ஒன்றில் பிட் வழங்கும் அன்பர்கள்(கோப்பு படம்)
பிஹார் தேர்வு மையம் ஒன்றில் பிட் வழங்கும் அன்பர்கள்(கோப்பு படம்)

கல்வித்துறையில் பல்வேறு சீர்திருத்த நடவடிக்கைகள் மற்றும் தவறிழைப்போர் மீது சட்டபூர்வமான நடவடிக்கை ஆகியவை மேற்கொள்ளப்பட்டதன் வாயிலாக, தேர்வு முறைகேடுகள் பெரியளவில் குறைந்தன. ஆனபோதும் கல்வித்துறையில் மலிந்திருக்கும் இதர நிர்வாக மெத்தனங்கள் மற்றும் முறைகேடுகள் காரணமாக, அவ்வப்போது புதிய பிரச்சினைகள் தலைகாட்டுவது உண்டு. அவற்றில் ஒன்றாக மோதிஹரி சம்பவமும் அரங்கேறி இருக்கிறது.

மோதிஹரியில் அமைந்திருக்கும் மகாராஜா ஹரேந்திர கிஷோர் கல்லூரியில், அன்றைய தினம் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் இன்டர்மீடியேட்(பிளஸ் 2க்கு இணையானது) தேர்வெழுத திரண்டிருந்தனர். அவர்களில் சுமார் 400 பேர், மதியம் 1.45 - 5.00 தேர்வு நேரத்துக்காக காத்திருந்தனர். ஆனால் இருக்கைகள் ஒதுக்கீடு தொடர்பாக எழுந்த நிர்வாக குழப்பங்களால், மாலை 4.30 மணி வரை, மாணவர்களுக்கு வினாத்தாள் வழங்கப்படவில்லை.

பின்னர் ஒருவழியாக தேர்வு தொடங்கியபோது இருட்டிவிட்டது. அப்போதுதான் அந்த வளாகத்தில் மின்சார வசதி இல்லை என்பதே நிர்வாகத்துக்கு உறைத்திருக்கிறது. அதற்குள், வீடு திரும்பாத மாணவர்களைத் தேடி பெற்றோர், கல்லூரி வளாகத்தில் திரண்டு விட்டனர். முழு விவரமும் அறிந்த அவர்கள் போராட்டத்தில் குதிக்க, போலீஸார் அங்கே குவிக்கப்பட்டு பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்ய வேண்டியதாயிற்று. மின்சாரம் இல்லாத குறையை போக்க, வாகனங்களை கொண்டுவந்து நிறுத்தி, அதன் முகப்பு விளக்கு வெளிச்சத்தில் மாணவர்களை வராந்தாக்களில் அமரவைத்து தேர்வெழுத விட்டனர். அன்றைய இரவு இவ்வாறாக தேர்வு முடிந்திருக்கிறது.

இந்த சம்பவம் தொடர்பாக கல்வித்துறை அதிகாரிகள் தனி விசாரணைக்கு உத்தரவிட்டிருக்கின்றனர். ஆனால் அவற்றில் திருப்தியடையாத பெற்றோர் மற்றும் மாணவர்கள், போராட்டங்களை தொடர்ந்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in