கன்னியாகுமரியில் காணாமல் போன முதியவர் கொலையா?: பாறைகளுக்கு இடையில் கிடந்த மனித எலும்புக்கூடால் சந்தேகம்

 மனித எலும்புக் கூடு
மனித எலும்புக் கூடு

கன்னியாகுமரி மாவட்டத்தில் நாடாங்கோணம் பொற்றைப் பகுதியில் மனித எலும்புகூடு கிடந்தது. அந்தப் பகுதியில் காணாமல் போன முதியவர் கொலை செய்யப்பட்டு இருப்பாரா என்ற கோணத்தில் போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கன்னியாகுமரி மாவட்டம், வில்லுக்குறி மாம்பழத்துறையாறு அணை அருகே உள்ளது நாடாங்கோணம் பொற்றை. சின்ன மலையான இங்கு மனித எலும்புக்கூடு ஒன்று கிடப்பதாக இரணியல் போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது. போலீஸார் நடத்திய சோதனையில் அது ஆண் எலும்புக்கூடு எனத் தெரியவந்தது. இந்நிலையில் திருவிடைக்கோடு பகுதியைச் சேர்ந்த கிருஷ்ணன்குட்டி(75) என்பவர் காணாமல் போனதாக அவரது மகள் பிரியா கடந்த 24-ம் தேதியே புகார் கொடுத்திருந்தார்.

அதன் அடிப்படையில் கிருஷ்ணன் குட்டியின் உறவினர்களுக்குத் தகவல் சொல்லப்பட்டது. அவர்கள் வந்து பார்த்தபோது அந்த எலும்புக்கூடின் அருகில் கிடந்த கைலியைத்தான் கிருஷ்ணன்குட்டி காணாமல் போன அன்று அணிந்திருந்ததாகத் தெரிவித்தனர். காவலாளியாக வேலை செய்த கிருஷ்ணன் குட்டி, சிலவாரங்களாகவே மனநலம் பாதிக்கப்பட்டுள்ளார். இருந்தும், கிருஷ்ணன்குட்டியின் எலும்புகூடு தானா என்பதை உறுதிப்படுத்தும்விதத்தில் எலும்புக்கூடுகளை ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சோதனைக்கு அனுப்பிவைத்தனர்.

அங்கு டிஎன்ஏ மற்றும் இம்போசிசன் சோதனைகளுக்குப் பின்புதான் அது கிருஷ்ணன்குட்டியின் எலும்புதானா என்பது தெரியவரும். அதேநேரத்தில் கிருஷ்ணன்குட்டி 75 வயதானவர். தன்னிச்சையாக அவர் மலைமேல் ஏறி இருக்கும் வாய்ப்பு மிகக்குறைவு என்பதாலும் போலீஸார் இது கொலையாக இருக்கலாம் எனவும் சந்தேகிக்கின்றனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in