பெண் மீது தாக்குதல்: உதவி ஆணையர், சப்-இன்ஸ்பெக்டருக்கு எதிராக மனித உரிமை ஆணையம் எடுத்த அதிரடி

பெண் மீது தாக்குதல்: உதவி ஆணையர், சப்-இன்ஸ்பெக்டருக்கு எதிராக மனித உரிமை ஆணையம் எடுத்த அதிரடி

சேலம் மாநகர காவல் உதவி ஆணையர் நாகராஜ் மற்றும் கிச்சிபாளையம் உதவி ஆய்வாளர் சின்னசாமி ஆகியோருக்கு ஐம்பதாயிரம் அபராதம் விதித்து மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2019-ம் ஆண்டில் சேலம் கிச்சிப்பாளையம் காவல் நிலையத்தில் காவல் ஆய்வாளராக நாகராஜும், உதவி ஆய்வாளராக சின்னச்சாமியும் பணியாற்றி வந்தனர். அப்போது வழக்கு ஒன்று தொடர்பாக காவல் நிலையத்தில் வைத்து மனித உரிமைகளை மீறி தன்னையும், தன் கணவரையும் அவர்கள் தாக்கியதாக பரமேஸ்வரி என்பவர் மாநில மனித உரிமை ஆணையத்தில் புகார் அளித்திருந்தார்.

அவரின் புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வந்தது. பரமேஸ்வரியின் சார்பில் உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் சர்ஜத் நைனா முகமது, சங்கர் மற்றும் சேலம் மஞ்சுளா ஆகியோர் ஆஜராகி வந்தனர்.

வழக்கின் விசாரணை முடிவடைந்த நிலையில் நேற்று மாலை தீர்ப்பு வழங்கப்பட்டது. மாநில மனித உரிமை ஆணைய உறுப்பினர் சித்தரஞ்சன் மோகன்தாஸ், அப்போதைய கிச்சிலிப்பாளையம் காவல் ஆய்வாளரும், தற்போது சேலம் உதவி ஆணையராக பணியாற்றி வருபவருமான நாகராஜ் மற்றும், அப்போதைய உதவி ஆய்வாளர் சின்னசாமிக்கு ரூபாய் 50,000 அபராதம் விதித்து உத்தரவிட்டார். சின்னச்சாமி ஓய்வு பெற்று விட்டார்.

பணியில் இருக்கும் காவல்துறையை சேர்ந்தவர்கள் பல நேரங்களில் தங்கள் அதிகாரத்தை பயன்படுத்தி மனித உரிமைகளை மீறுவதாக தொடர்ந்து குற்றச்சாட்டுகள் எழுந்து வரும் நிலையில், காவல் அதிகாரிகளுக்கு அபராதம் விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது காவல்துறை அதிகாரிகள் வட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in