10 ஆண்டுகளில் யானை தாக்குதலில் 925 பேர் உயிரிழப்பு - 784 யானைகள் மரணம்: ஒடிசா அரசு தகவல்

யானை
யானை10 ஆண்டுகளில் யானை தாக்குதலில் 925 பேர் உயிரிழப்பு - 784 யானைகள் மரணம்: ஒடிசா அரசு தகவல்

ஒடிசாவில் கடந்த 10 ஆண்டுகளில் யானை-மனித மோதல்களில் 925 பேர் இறந்துள்ளனர் மற்றும் 212 பேர் நிரந்தர ஊனமுற்றுள்ளனர் என்று ஒடிசா வனம் மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சர் பிரதீப் குமார் அமத் தெரிவித்தார்.

2012 முதல் 2022 வரை ஒடிசா காடுகளில் 784 யானைகள் மரணமடைந்ததாக ஒடிசா வனம் மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சர் பிரதீப் குமார் அமத் மாநில சட்டமன்றத்தில் செவ்வாயன்று எழுத்துப்பூர்வமாக பதிலளித்தார். நோய், விபத்துகள், வேட்டையாடுபவர்களால் விஷம் மற்றும் மின்சாரம் தாக்குதல் போன்றவை மாநிலத்தில் யானைகள் இறப்பதற்கு சில முக்கிய காரணங்கள் ஆகும்.

2019-20ல் 117 பேர், 2020-21ல் 139 பேர், 2021-22ல் 112 பேர் யானை-மனித மோதல்களால் உயிரிழந்துள்ளனர். இதுவே 2012-13ல் 80 ஆகவும், 2013-14ல் 67 ஆகவும், 2014-15ல் 65 ஆகவும் இருந்தது. யானைகள் மோதலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ.4 லட்சமும், நிரந்தர ஊனமுற்றோருக்கு ரூ.1 லட்சமும் மாநில அரசு இழப்பீடாக வழங்குகிறது.

2017ஆம் ஆண்டு ஒடிசாவில் நடத்தப்பட்ட சமீபத்திய யானைகள் கணக்கெடுப்பின்படி, மாநிலத்தில் யானைகளின் எண்ணிக்கை 1,976 ஆக இருப்பதாக அமைச்சர் கூறினார். கடந்த 10 ஆண்டுகளில் 39 யானைகள் இறந்தது குறித்து மாநில அரசு விசாரித்து 50 பேர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் அமத் கூறினார். எனினும், இந்த வழக்குகளில் ஒரு குற்றவாளி கூட தண்டிக்கப்படவில்லை என்றும் அவர் கூறினார். வனவிலங்கு பாதுகாப்புச் சட்டம், 1972ன் படி, யானைகளைக் கொன்றால், ஏழாண்டு சிறைத்தண்டனை விதிக்கப்படும்.

கடந்த ஆண்டு ஆகஸ்டில், மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகம், ஒடிசாவில் யானைகள் இறந்தது குறித்து விசாரிக்க ஒரு குழுவை ஒடிசாவுக்கு அனுப்பியது. யானை மரணம் தொடர்பான நான்கு பொது நல வழக்குகளை விசாரித்து ஒரிசா உயர் நீதிமன்றமும் கவலை தெரிவித்தது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in