5 மாதங்களுக்கு முன்பு காணாமல் போன இளைஞர்; காட்டில் எலும்புக்கூடாக கண்டுபிடிப்பு: கொலையா என விசாரணை

 கண்டெடுக்கப்பட்ட எலும்புக் கூடு.
கண்டெடுக்கப்பட்ட எலும்புக் கூடு.

தூத்துக்குடி மாவட்டம், நாசரேத் அருகே வனப்பகுதியில் மனித எலும்புக்கூடு கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தூத்துக்குடி மாவட்டம், நாசரேத் அருகில் நாலுமாவடி ஊரின் தெற்குப்பகுதியில் தேரிக்காடு ஒன்று உள்ளது. முப்பது கிலோ மீட்டர் சுற்றளவு கொண்ட இந்தத் தேரிக்காடானது வனத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதியாகும். இந்த தேரிக்காட்டில் ஏராளமான பனை, முள் செடிகள் மற்றும் முந்திரி மரங்கள் உள்ளன. முழுக்க செம்மண் சூழ்ந்த இந்த தேரிக்காடு திருச்செந்தூர் வனச்சரகத்திற்கு உட்பட்டது.

இந்த தேரிக்காட்டில் மனித எலும்புக்கூடு ஒன்று கிடப்பதாக போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் போலீஸார் சம்பவ இடத்திற்கு சென்று பார்த்த போது மனிதனின் தலை, இடுப்பு எலும்பு, கை, கால் ஆகிய மொத்த உடல் உறுப்புகளின் எலும்புகளும் இருந்தது. அதன் அருகிலேயே ஒரு ஜோடி செருப்பும் கிடந்தது.

ஊருக்கு ஒதுக்குப்புறமாக இருக்கும் இந்தத் தேரிக்காட்டில் மறைவாக மது அருந்த வந்தவர்களுக்குள் தகராறு ஏற்பட்டு கொலை நடந்ததா? அல்லது வேறுபகுதியில் கொலை செய்யப்பட்டு இங்குவந்து புதைக்கப்பட்டிருந்த உடலா? சடலமாக இல்லாமல் எலும்புக்கூடாகவே வந்தது எப்படி? என பல்வேறு கோணத்திலும் நாசரேத் போலீஸார் விசாரணை மேற்கொண்டனர்.

நாசரேத் கீழத்தெருவைச் சேர்ந்த பால்ராஜ் மகன் பாபுசங்கர்(39), மார்ச் மாதம் முதல் காணவில்லை என்று நாசரேத் போலீஸ் வழக்குப்பதிவு செய்து அவரைத் தேடி வந்துள்ளனர். தேரிக்காட்டில் கிடந்தது அவர் எலும்புக்கூடு தான் என்பதை போலீஸார் என்பதை உறுதி செய்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்பட்டுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in