கலரை மாற்றவில்லை, நம்பர் பிளேட்டை மாற்றிவிட்டார்: திருடிய பைக்குடன் ஜாலியாக வலம் வந்த வாலிபர் சிக்கினார்

கலரை மாற்றவில்லை, நம்பர் பிளேட்டை மாற்றிவிட்டார்: திருடிய பைக்குடன் ஜாலியாக வலம் வந்த வாலிபர் சிக்கினார்

நாகர்கோவிலில் திருட்டு பைக்கில், திருடிய பகுதியிலேயே ஜாலியாக உலா வந்த வாலிபரை பொதுமக்கள் மடக்கிப் பிடித்த ருசிகர சம்பவம் நடந்துள்ளது.

நாகர்கோவில் இடலாக்குடி பகுதியைச் சேர்ந்தவர் நிஜாம். இவர்மீது பல்வேறு காவல் நிலையங்களிலும் 12 வழக்குகள் நிலுவையில் உள்ளது. இந்நிலையில் இவர் கடந்த நான்கு நாள்களுக்கு முன்பு, பீச் ரோடு பகுதியைச் சேர்ந்த ஒருவரின் மோட்டார் சைக்கிளைத் திருடினார். அந்த மோட்டார் சைக்கிளில் மற்ற இடங்களில் எல்லாம் ஊர் சுற்றினார் நிஜாம். திருடிய மோட்டார் சைக்கிளின் கலரை மாற்றவோ, வேறு எந்த ஆல்ரேசனும் செய்யவோ இல்லை. மிக எளிதாக போலியான ஒரு நம்பர் பிளேட்டை மட்டும் செய்து அதில் பொருத்திக்கொண்டார்.

இந்நிலையில் நேற்று இரவு, பைக்கைத் திருடிய அதே பீச் ரோடு பகுதியில் உள்ள டாஸ்மாக் கடைக்கு மதுவாங்க வந்தார் நிஜாம். இந்நிலையில் பைக்கின் உரிமையாளரும், அவரது நண்பர்களும் காணாமல் போன தனது பைக்கைப் போலவே இருப்பதாக சந்தேகப்பட்டு பார்த்தபோது நம்பர் பிளேட் மட்டுமே மாற்றப்பட்டிருந்தது. இதனைத் தொடர்ந்து நிஜாமைப் பிடித்து பொதுமக்கள் தாக்கினர். தொடர்ந்து நிஜாம் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். போலீஸார் இதுகுறித்து விசாரித்து வருகின்றனர்.

பைக்கைத் திருடிவிட்டு, திருடிய பகுதியிலேயே ஜாலி உலா வந்த வாலிபரின் செயல் பரபரப்பையும் ஏற்படுத்தியது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in