ரேபிஸ் தடுப்பூசி போட்டும் நாய் கடித்த மாணவி இறந்தது எப்படி?-மருத்துவர்கள் விளக்கம்

ரேபிஸ் தடுப்பூசி போட்டும் நாய் கடித்த மாணவி இறந்தது எப்படி?-மருத்துவர்கள் விளக்கம்

கேரளத்தின் பாலக்காடு மாவட்டத்தைச் சேர்ந்த ஸ்ரீலெட்சுமி, தனக்கு நாய் கடித்ததும் ரேபிஸ் தடுப்பூசி போட்டிருந்தார். அதன் பின்னரும் அவர் உயிர் இழந்தது எப்படி என்பது குறித்து சிகிச்சையளித்த மருத்துவர்கள் விளக்கம் அளித்துள்ளனர்.

கேரளத்தின் பாலக்காடு மாவட்டம், மங்காரா பகுதியைச் சேர்ந்தவர் ஸ்ரீலெட்சுமி (18). இவர் கோயம்புத்தூரில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் பி.சி.ஏ., முதலாமாண்டு படித்து வந்தார். இந்த நிலையில் கடந்த மே மாதம் 30-ம் தேதி கல்லூரிக்குச் செல்லும் வழியில் நாய் ஒன்று இவரைக் கடித்தது. உடனே ரேபிஸ் தடுப்பு மருந்தையும் எடுத்துக் கொண்டார் ஸ்ரீலெட்சுமி. அதன் பின்னர் எந்த அறிகுறியும் இல்லாததால் இயல்பாகவே இருந்தார்.

இந்நிலையில் திடீரென ஸ்ரீலெட்சுமிக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து, அவர் மங்காராவில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சைக்குச் சேர்ந்தார். அவருக்குத் தொடர் காய்ச்சல், நாய்கடித்த இடத்தில் வலி, வாந்தி உள்ளிட்ட ரேபிஸ் நோயின் அறிகுறிகள் இருந்தன. நோய் உறுதி செய்யப்பட்டதால் திருச்சூர் மருத்துவக் கல்லூரிக்கு மாற்றப்பட்டு. அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனாலும் சிகிச்சை பலனின்றி ஸ்ரீலெட்சுமி உயிர் இழந்தார்.

ஸ்ரீலெட்சுமியைக் கடித்த நாய், அதற்கு ஒருநாள் முன்பே அதை வளர்க்கும் உரிமையாளரைக் கடித்தது. ஆனால், அவருக்கு எந்த அறிகுறியும் இதுவரை இல்லை. ரேபிஸ் நோயைப் பொறுத்தவரை நாய் கடித்த 90 நாள்கள் வரை அறிகுறிகளைக் காட்டும் தன்மையுடையது என்பதால் அவரும் மருத்துவக் கண்காணிப்பிலேயே இருக்கிறார்.

இவ்விவகாரத்தில் திருச்சூர் அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் பிரதாப் சோம்நாத் தலைமையில் இன்று காலையில் கூட்டம் நடந்தது. அதில் ஸ்ரீலெட்சுமிக்கு சிகிச்சை கொடுத்த மருத்துவர்கள், “இது அரிதிலும், அரிதான நிகழ்வு. சில மருந்துகள் சில உடம்பிற்கு பலனலிக்காமல் போகலாம். அது ஸ்ரீலெட்சுமிக்கு நிகழ்ந்திருக்கிறது. வைரஸ் அவர் மூளைக்கு வேகமாக பரவியதால் மரணம் நிகழ்ந்திருக்கக்கூடும் என அபிமானிக்கிறோம். நாய் விரல்களில் கடித்ததால் மூளைக்கு வைரஸ் விரைவாக பரவியுள்ளது” என்றனர். அப்போது ஸ்ரீலெட்சுமியின் ரத்தமாதிரிகள் திருவனந்தபுரத்தில் உள்ள ரேபிஸ் ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது குறித்தும் தகவல் தெரிவிக்கப்பட்டது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in