பொங்கல் பரிசு தொகுப்புடன் வழங்கப்படும் ரொக்கப்பணம் எவ்வளவு?

பொங்கல் பரிசு தொகுப்புடன் வழங்கப்படும் ரொக்கப்பணம் எவ்வளவு?

தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரேஷன் கடைகளில் பரிசுத்தொகுப்பு பொருட்களுடன் ரொக்கமாக வழங்கப்படுவது 1500 ரூபாயா, 1000 ரூபாயா என்ற கேள்வி எழுந்துள்ளது.

பொங்கல் பண்டிகையை பொதுமக்கள் சிறப்பாகக் கொண்டாடும் வகையில், தமிழக அரசின் சார்பில் பரிசுத் தொகுப்புடன் ரூ.1000 பணம் ரொக்கமாக வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசு கடந்த முறை, ரொக்கப் பணம் வழங்கவில்லை. அதற்குப் பதிலாக பொங்கலுக்குத் தேவையான பச்சரிசி, வெல்லம், முந்திரி, திராட்சை, ஏலக்காய், பாசிப்பருப்பு, நெய் போன்ற பொருட்களும், பண்டிகைக் கால சமையலுக்குத் தேவையான மஞ்சள்தூள், மிளகாய் தூள், மல்லித்தூள், கடுகு, சீரகம், மிளகு, புளி, கடலைப் பருப்பு, உளுத்தம் பருப்பு, ரவை, கோதுமை மாவு, உப்பு ஆகிய 21 மளிகைப் பொருட்கள் அடங்கிய தொகுப்பை 2,15,48,060 குடும்பங்களுக்கு, மொத்தம் ஆயிரத்து 88 கோடி ரூபாய் செலவில் வழங்கியது.ஆனால், இப்படி வழங்கப்பட்ட பொருட்கள் தரமில்லாதவை என்ற புகார் கிளம்பியது. இதன் காரணமாக இந்த பொருட்கள் சப்ளை செய்த நிறுவனம் மீது புகார் எழுந்தது.

இந்நிலையில், 2023-ம் ஆண்டு பொங்கல் பண்டிகைக்கான பரிசு தொகுப்பில் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் சிறப்பு தொகுப்பு வழங்குவது குறித்து சென்னை தலைமை செயலகத்தில் ஆலோசனை பெற்றுள்ளது.

இந்தக் கூட்டத்தில் பொங்கல் பரிசு தொகுப்பில் என்னென்ன பொருட்கள் வழங்குவது, எவ்வாறு கொள்முதல் செய்வது உள்ளிட்ட விவகாரங்கள் தொடர்பாக ஆலோசிக்கப்பட்டன. கடந்த முறை வழங்கியது போல 21 பொருட்களுடன் பரிசுத்தொகுப்பு வழங்குவதா அல்லது குறிப்பிட்ட சில பொருட்கள் மட்டும் வழங்குவதா என ஆலோசிக்கப்பட்டது. இந்த நிலையில், இந்த முறை பரிசு தொகுப்பில் பச்சரிசி, சர்க்கரை, ஆவின் நெய் மட்டும் மஞ்சள் பையில் வைத்து வழங்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதிமுக ஆட்சி காலத்தில் பரிசுத்தொகுப்போடு 2500 ரொக்கப்பணம் வழங்கப்பட்டது. ஆனால், தற்போது 21 பொருட்களுக்குப் பதிலாக மூன்று பொருட்களுடன் ரொக்கப்பணமாக 1500 ரூபாய் தருவதா அல்லது 1000 ரூபாய் தருவதா என ஆலோசிக்கப்பட்டுள்ளது.

இந்த முறை கரும்பு இல்லாமல் மூன்று பொருட்களுடன் ரொக்கப்பணமாக 1000 ரூபாய் வழங்கப்படுவதற்கான நடவடிக்கையை அரசு எடுக்கும் என்று கூட்டுறவுத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த திட்டத்தை, ஜனவரி மாத முதல் வாரத்தில் முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைப்பார் என்று தெரிகிறது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in