
இந்திய கிரிக்கெட் வீரர் ரிஷப்பின் உடல்நிலையில் ஏற்படும் முன்னேற்றங்களை நாங்கள் கவனித்து வருகிறோம். அவருக்குத் தேவையான அனைத்து உதவிகளும் செய்து தரப்படும்' என்று பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா கூறியுள்ளார்.
இந்திய கிரிக்கெட் வீரர் ரிஷப் பண்ட், உத்தராகண்ட் மாநிலம் ரூர்க்கியில் இருந்து டெல்லி நோக்கி தனது காரில் இன்று சென்று கொண்டிருந்தார். அப்போது, கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையின் நடுவில் இருந்த தடுப்பு கம்பியில் பயங்கரமாக மோதியது. இதில் கார் தீப்பிடித்து எரிந்து விபத்துக்குள்ளானது. கார் மோதிய வேகத்தில் அவரது தலை, முதுகில் பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து அவர் ரூர்க்கி மாவட்டத்தில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் ரிஷப் பண்டின் உடல்நிலை குறித்து பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு தகவலைப் பதிவிட்டுள்ளார். அதில் 'கார் விபத்தில் காயமடைந்துள்ள ரிஷப் பண்ட் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன். விபத்து குறித்து அவரது குடும்பத்தினரிடமும், மருத்துர்களிடமும் பேசினேன். ரிஷப்பின் உடல்நிலை சீராக உள்ளது. அவருக்கு ஸ்கேன்கள் எடுக்கப்பட்டுள்ளன. ரிஷப்பின் உடல்நிலையில் ஏற்படும் முன்னேற்றங்களை நாங்கள் கவனித்து வருகிறோம். அவருக்குத் தேவையான அனைத்து உதவிகளும் செய்து தரப்படும்' என்று கூறியுள்ளார்.