'ஃப்ரீ பயர்' விளையாட்டை தடை செய்த பிறகும் ஆன்லைனில் எப்படி கிடைக்கிறது?: ஐகோர்ட் நீதிபதிகள் அதிரடி கேள்வி

'ஃப்ரீ பயர்' விளையாட்டை தடை செய்த பிறகும் ஆன்லைனில் எப்படி கிடைக்கிறது?: ஐகோர்ட் நீதிபதிகள் அதிரடி கேள்வி

'ஃப்ரீ பயர்' போன்ற விளையாட்டுக்களை மத்திய அரசு தடை செய்த பிறகும், இந்த விளையாட்டு ஆன்லைனில் எப்படி கிடைக்கிறது என்று உயர் நீதிமன்ற நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

நாகர்கோவிலைச் சேர்ந்த ஐரின் அமுதா, உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், " எனது மகள் நாகர்கோவிலில் உள்ள தனியார் கல்லூரியில் இளநிலை பட்டம் படித்து வருகிறார். இந்நிலையில் எனது மகள் கடந்த 6-ம் தேதி முதல் காணவில்லை. இதுகுறித்து கன்னியாகுமரி வடசேரி காவல் நிலையத்தில் புகார் கொடுத்தேன்..

அதைப் பெற்றுக் கொண்ட காவல்துறையினர் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனது மகள் 'பப்ஜி' மற்றும் ' ஃப்ரீ பயர்' ஆகிய ஆன்லைன் விளையாட்டில் அதிக ஆர்வம் காட்டி வந்தார். இதன் மூலம் என் மகளுக்கு வாலிபர் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டது. எனவே, அவர் தான் எனது மகளைக் கடத்தியிருக்க வேண்டும். எனவே, எனது மகளை மீட்டு ஆஜர்படுத்த போலீஸாருக்கு உத்தரவிட வேண்டும்" என மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதிகள் மகாதேவன், சத்திய நாராயண பிரசாத் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், " ஆன்லைன் விளையாட்டுகளான 'ஃப்ரீ பயர்' போன்றவை மத்திய அரசால் தடை செய்யப்பட்டு விட்டது. இருந்த போதும் இந்த விளையாட்டு எப்படி ஆன்லைனில் கிடைக்கிறது? இது போன்ற விளையாட்டுகளால் இளைய சமுதாயம் தவறான பாதைக்குச் செல்வதை ஏற்க இயலாது. சைபர் குற்றப்பிரிவு போலீஸார் இதுகுறித்து ஏன் கடும் நடவடிக்கை எடுக்கவில்லை? என்று கேள்வி எழுப்பினர். தொடர்ந்து நீதிபதிகள் இதுகுறித்து விரிவான உத்தரவு பிறப்பிக்கப்படும் எனக்கூறி வழக்கு விசாரணையை ஒத்திவைத்தனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in