
தூத்துக்குடி மாவட்டத்தில் பாட்டியைக் கொலை செய்த பேரன் ஒருவருடத்திற்குப் பின்பு தனிப்படை போலீஸாரால் கைது செய்யப்பட்டார். நகைக்காக நடந்த இந்த கொலை சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
தூத்துக்குடி மாவட்டம், அம்மன்புரம் பகுதியைச் சேர்ந்தவர் காசி என்ற பெருமாள். இவர் சில ஆண்டுகளுக்கு முன்பு உடல் நலக்குறைவால் இறந்துவிட்டார். இவரது மனைவி நாகூரால் தனிமையில் வீட்டில் வசித்துவந்தார். இவர்களது ஒரே மகள் இசக்கியம்மாளையும் சொந்த ஊரிலேயே திருமணம் செய்து கொடுத்து இருந்தனர். இதனால் இசக்கியம்மாள் வீட்டில் இருந்தே தினமும் சாப்பாடு நாகூராலுக்கு வந்து சேரும். இசக்கியம்மாளின் மகன்கள் பழனிசாமி, ராஜா(35) ஆகியோர் மாறி, மாறி உணவைக் கொண்டு வருவது வழக்கம்.
கடந்த ஆண்டு ஜனவரி மாதம் நாகூராலுக்கு காலை உணவை பேரன் பழனிசாமி கொண்டு வந்தார். அவர் வீட்டின் உள்ளே சென்றுபார்த்தபோது அவரது பாட்டி நாகூரால் கொல்லப்பட்டிருந்தார். அவரது கழுத்தில் கிடந்த செயினும் மாயமாகியிருந்தது. இதுகுறித்து குரும்பூர் போலீஸார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வந்தனர்.
ஆனால், எவ்வித துப்பும் துலங்கவில்லை. இதுகுறித்து விசாரிக்கத் தனிப்படையும் அமைக்கப்பட்டது. இந்த தனிப்படை போலீஸார் பாட்டிக்கு தினமும் உணவு கொண்டு செல்லும் இரு பேரன்களையும் விசாரித்தனர். அதில் மூத்த பேரனான ராஜா முன்னுக்குப் பின் முரணான தகவல்களைச் சொல்லவே அவர் மீது சந்தேகப் பார்வை விழுந்தது. தொடர்ந்து போலீஸார் நடத்திய விசாரணையில், பாட்டி கழுத்தில் கிடந்த 5 பவுன் நகைக்காக பேரன் ராஜாவே கொலை செய்தது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து சம்பவம் நடந்து ஓராண்டுக்குப் பின்பு இன்று ராஜா கைது செய்யப்பட்டு பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டார்.