ஸ்ரீரங்கம் கோயிலைச் சுற்றி உயர கட்டுப்பாடு விதியை மீறிய கட்டிடங்கள் கட்ட அனுமதி வழங்கியது எப்படி? - நீதிமன்றம் கேள்வி

ஸ்ரீரங்கம்
ஸ்ரீரங்கம்

ஸ்ரீரங்கம் கோயிலைச் சுற்றி அரசின் உயரக் கட்டுப்பாட்டு விதிகளை மீறி கட்டிடங்கள் கட்டுவதற்கு அனுமதி வழங்கியது எப்படி என உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

கரூர் மாவட்டம் குளித்தலையைச் சேர்ந்த மகுடேஸ்வரன், உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனுவில், தமிழகத்தில் பழமையான கோயில் அமைந்திருக்கும் பகுதியில் கோயில் கோபுரங்களில் இருந்து ஒரு கிலோ மீட்டர் சுற்றளவில் 9 மீட்டருக்கு மேல் கட்டிடங்கள் கட்டக்கூடாது என 1997-ல் அரசாணை உள்ளது. இந்த அரசாணையை மீறி ஸ்ரீரங்கம் கோயிலை சுற்றி சட்டவிரோதமாக உயரக் கட்டுப்பாட்டை மீறி கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளன.

கோயிலில் இருந்து நூறு மீட்டருக்குள் 9 மீட்டர் உயரத்திற்கு மேல் 73 கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளன. சித்திரை வீதிகளில் வீடுகள், கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளது. விதிகளை மீறி கட்டப்பட்டுள்ள கட்டிடங்களை ஆய்வு செய்து அகற்ற வேண்டும். இதற்காக வழக்கறிஞர் ஆணையர் நியமித்து உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதிகள் ஆர்.மகாதேவன், ஜெ.சத்திய நாராயண பிரசாத் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், உயரக் கட்டுப்பாட்டு விதிகளை மீறி கோயில் பகுதியில் கட்டிடங்கள் கட்டுவதற்கு அனுமதி வழங்கியது எப்படி? என கேள்வி எழுப்பினர். பின்னர் இந்த மனு தொடர்பாக அரசு விரிவான பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு விசாரணையை 2 வாரங்களுக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in